மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்டோ, டாக்ஸி மற்றும் ஓலா, ஊபர் போன்ற வாடகை வாகனங்களை ஓட்டுபவர்கள் கட்டாயம் மராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற புதிய விதியை அம்மாநில போக்குவரத்துத் துறை சமீபத்தில் தீவிரமாக அமல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, மராத்தி பேசத் தெரியாத வெளிமாநில ஓட்டுநர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், பிழைப்பு தேடி மும்பை வந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், மராத்தி மொழி தெரியாத காரணத்தினால் தனது வாழ்வாதாரம் பறிபோய்விடும் என்று அஞ்சி தனது ஆட்டோவில் அமர்ந்தபடி கண்ணீர் விட்டு அழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ள ஓட்டுநர், மராத்தி பேசத் தெரியவில்லை என்றால் 10,000 முதல் 15,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுவதாகவும், மூன்று மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். ஹிந்தி மொழியையே சரிவர படிக்கத் தெரியாத பாமர மக்களான தங்களால், ஒரே மாதத்தில் எப்படி புதிதாக ஒரு மொழியை கற்றுக்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பும் அவர், மொழியை கற்பதற்கு அரசு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்தச் சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், ஏழைத் தொழிலாளர்களின் நிலைக்கு அனுதாபப்பட்டும், அரசின் இந்த அதிரடி நடவடிக்கையை விமர்சித்தும் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
