தமிழக அரசியலில் பொதுவாழ்வுக்கு வரும் பெண்கள், கொள்கை ரீதியான விவாதங்களை விடவும் அவர்களின் தோற்றம், உடை மற்றும் பேச்சுநடைக் காகவே அதிகம் விமர்சிக்கப்படும் சூழல் காலம்காலமாகத் தொடர்கிறது. அமைச்சரவையில் இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்கப்படும் சூழலில், பொறுப்பேற்கும் பெண் தலைவர்களின் தகுதியை ஆராய்வதற்குப் பதிலாக அவர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளைக் கேலிக்குள்ளாக்கும் போக்கும், சமூக வலைதளங்களில் அவர்களை இலக்கு வைத்துப் பரப்பப்படும் தவறான கருத்துகளும் தீவிரமடைந்து வருகின்றன.
சமீபத்தில் தனக்கு எதிராக பரப்பப்பட்ட சர்ச்சைக்குரிய போலி வீடியோ குறித்துப் பேசிய அமைச்சர் கீர்த்தனா, அதற்கு நேரடியாகவும் துணிச்சலாகவும் பதிலளித்திருந்தார். “அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல” எனத் தெளிவுபடுத்திய அதே வேளையில், “ஒருவேளை அது நானாகவே இருந்திருந்தாலும், ஒரு பெண்ணின் உடை, தோற்றம் அல்லது மகிழ்ச்சி ஏன் இன்னும் பொதுவெளியில் விமர்சனத்திற்குரிய விஷயமாகக் கருதப்படுகிறது?” எனக் கேள்வி எழுப்பினார். தன்னம்பிக்கையுடன் எழுப்பப்பட்ட இக்கேள்வி, சமூக வலைதளங்களில் நிலவும் பிற்போக்குத்தனமான மனநிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
இந்நிலையில், தஞ்சையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் விமர்சித்துத் தரக்குறைவாகப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாற்றுக் கருத்துகளை முன்வைப்பதற்குப் பதிலாக, தனிநபர் தாக்குதலில் ஈடுபடும் இத்தகைய பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
இச்சம்பவம் குறித்துக் குரல் கொடுத்துள்ள திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, “ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் களத்தில் துணிச்சலுடன் செயலாற்றும் பெண்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், அவர்களின் உடை மற்றும் தோற்றத்தை வைத்து விமர்சிப்பது மலினமான அரசியலின் வெளிப்பாடு” எனத் தெரிவித்துள்ளார். காலம் காலமாக அரசியல் வேறுபாடின்றி பெண்கள் மீது நடத்தப்படும் இத்தகைய அநாகரிகமான தாக்குதல்களைக் கடந்தே அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
