நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பேரழிவு தரும் திடீர் வெள்ளப்பெருக்கினால் ஏராளமான வீடுகள் இடிந்து சாம்பலாகியுள்ளன. இந்த அழிவுகளுக்கு இடையே, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன தங்கள் உரிமையாளர்களுக்காக வளர்ப்பு நாய்கள் இடிபாடுகளிலேயே காத்திருக்கும் காட்சிகள் காண்போரின் நெஞ்சை உருக்குகின்றன.
திரிசூலி பஜாரில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்ட இடத்தில், கழுத்தில் பட்டையுடன் கூடிய கருப்பு நிற நாய் ஒன்று ஜேசிபி இயந்திரங்களின் இரைச்சலையும் பொருட்படுத்தாமல் ஒரே இடத்தில் அமர்ந்துள்ளது. தன்னார்வலர்கள் கொடுத்த பிஸ்கட் மற்றும் உணவைக்கூட அது உட்கொள்ள மறுத்துத் தன் எஜமானரின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.
அதேபோல, துங்கே பகுதியில் ‘லில்லி’ என்ற நாய் உணவளித்த விடுதி உரிமையாளரைக் தேடி அழிந்த கட்டடத்தின் அருகிலேயே வலம் வருகிறது. சொந்தங்களை இழந்து தவிக்கும் மனிதர்களுக்கு மத்தியில், இந்தச் செல்லப் பிராணிகளின் மாறாத நன்றியுணர்வும் பாசமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பலரையும் கலங்க வைத்துள்ளது.
