விவசாயக் கடன், கல்விக்கடன் அனைத்தும் தள்ளுபடி… எதிர்கட்சியினரை அறவிடப்போகும் திமுக அறிக்கை…!!

By Soundarya on பங்குனி 21, 2026

Spread the love

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ஆளும் திமுகவின் தேர்தல் அறிக்கை இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கனிமொழி எம்.பி. தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளைப் பெற்று அறிக்கையை இறுதி செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் இடம்பெறப்போகும் வாக்குறுதிகள் இப்போதே பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளன.

 இந்தத் தேர்தல் அறிக்கையில் மாணவர்களின் நீண்டகாலக் கோரிக்கையான கல்விக்கடன் நிலுவைத் தொகையை முழுமையாகத் தள்ளுபடி செய்வது குறித்த அறிவிப்பு முக்கிய இடம்பெறும் எனத் தெரிகிறது. அதேபோல், சிறு மற்றும் குறு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, கூட்டுறவு வங்கிகளில் அவர்கள் பெற்றுள்ள கடன்களைத் தள்ளுபடி செய்யும் கவர்ச்சிகரமான வாக்குறுதியும் இதில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

   

தொழில் நிமித்தமாகச் சொந்தமாக ஆட்டோ வாங்குபவர்களுக்கு ரூ.10,000 வரை மானியம் வழங்கும் புதிய திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும், பெண்களுக்கு வழங்கப்படும் உரிமைத்தொகையில் சிறப்பு மாற்றங்கள் அல்லது உயர்வு மற்றும் நிலமற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவுடன் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் திட்டமும் இந்த அறிக்கையில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளது.

   

ஏற்கனவே 2021 தேர்தலில் அளித்த பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக திமுக கூறி வரும் நிலையில், இந்த 2026 தேர்தல் அறிக்கை “திராவிட மாடல்” ஆட்சியின் அடுத்தகட்ட நகர்வாக அமையும் என உடன்பிறப்புகள் உற்சாகத்தில் உள்ளனர். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த அறிக்கை மிக வலிமையானதாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.