“அமெரிக்க போர்க்கப்பல்களை குறிவைத்த ரஷ்யா…?” ஈரானுக்குக் கசிந்த ரகசியத் தகவல்களால் மத்திய கிழக்கில் பதற்றம்…!!

By Devi Ramu on பங்குனி 21, 2026

Spread the love

உக்ரைன் போரில் அமெரிக்கா வழங்கி வரும் ராணுவ உதவிகளை நிறுத்தினால், பதிலுக்கு ஈரானுக்குத் தான் வழங்கி வரும் உளவுத் தகவல்களை நிறுத்துவதாக ரஷ்யா பேரம் பேசியதாக வெளியான செய்தியை கிரெம்ளின் மாளிகை திட்டவட்டமாக மறுத்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் பிரதிநிதிகளுடன் ரஷ்யத் தூதர் நடத்திய ரகசிய சந்திப்பில் இத்தகைய முன்மொழிவு வைக்கப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால், இந்தத் தகவலை ரஷ்யத் தரப்பு “முற்றிலும் பொய்” என்று சாடியுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையே தேவையில்லாத பதற்றத்தை உருவாக்க இத்தகைய செய்திகள் பரப்பப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் இருக்கும் இடங்கள் குறித்த ரகசியத் தகவல்களை ரஷ்யா ஈரானுக்குப் பகிர்ந்ததாக ஏற்கனவே புகார்கள் எழுந்தன. இது குறித்துப் பேசிய வெள்ளை மாளிகை, ரஷ்யாவின் இத்தகைய செயல் அதிபர் டிரம்பிற்கு அதிருப்தியை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது. ஈரான் தற்போது ரஷ்யாவின் முக்கிய கூட்டாளியாக உருவெடுத்துள்ள நிலையில், அமெரிக்கா – ரஷ்யா இடையிலான இந்தப் பேச்சுவார்த்தை குறித்த முரண்பட்ட தகவல்கள் சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.