சினிமாவை விட்டு முழுநேர அரசியல்வாதியாக மாறியுள்ள நடிகர் விஜய், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்துச் செயல்படுகிறார். அவர் செல்லும் மேடைகள் அனைத்திலும், இந்தத் தேர்தல் போட்டி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், தமிழக வெற்றிக் கழகத்துக்கும் இடையேதான் என்று தொடர்ந்து பேசி வருகிறார். அதற்கு ஏற்றாற்போல் திமுகவைச் சாடியும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராகவும் ஆவேசமாகப் பேசி வருகிறார்.
இந்த அரசியல் போட்டி இப்போது திரையுலகிலும் எதிரொலிப்பதாகக் கூறப்படுகிறது. வரவிருக்கும் தயாரிப்பாளர் சங்க கவுன்சில் தேர்தலில் இரு அணிகளுக்கிடையே போட்டி உருவாகியுள்ளது. ஒரு அணியில் ரெட் ஜெயண்ட் சார்பில் தமிழ்க்குமரன் தலைவர் பதவிக்கு நிற்கிறார். இன்னொரு அணியில் இயக்குநர் லிங்குசாமியின் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.
இந்த அணியில்தான், விஜய்யின் தாய் மாமாவும், ‘மாஸ்டர்’ படத்தைத் தயாரித்தவருமான சேவியர் பிரிட்டோ துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். மேலும், ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தை இயக்கிய சௌந்தர் செயலாளர் பதவிக்கு நிற்கிறார். விஜய்யின் தாய் மாமா போட்டியிடுவதால், திரையுலகிலும் திமுக vs தவெக என்ற ரீதியில் போட்டி வந்துவிட்டதாக சினிமா வட்டாரங்கள் பேசுகின்றன.
