தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக இந்த முறையும் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. ஆனால் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சில கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு வருவதால் ஸ்டாலினுக்கு அது பெரிய சிக்கலை உண்டாக்கியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் வெளிப்படையாகவே கூடுதல் தொகுதிகளை கேட்டு வருவதும் இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட இருப்பதாகவும் சமீப காலமாகவே செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் 2021 இல் ஆறு தொகுதிகள் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது டபுள் டிஜிட் கேட்பதாக கூறப்படுகிறது. அதன்படி செய்யூர், திருப்போரூர், காட்டுமன்னார்கோவில், நாகை, அரக்கோணம், வானூர், புவனகிரி, கள்ளக்குறிச்சி, குன்னம், தர்மபுரியின் அரூர், ஊத்தங்கரை, ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளை கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஊத்தங்கரையும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியும் காங்கிரஸ் தொகுதி என்பதால் திமுக தயங்குவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றன.
