கர்நாடக மாநிலம் கோப்பல் மாவட்டம் கங்காவதி நகரில் உள்ள காலணியில் 17 வயது சிறுமி ஒருவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் நிலையில் கூலி தொழிலாளியான இவருடைய தந்தைக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து சிறுமியின் தாயாரிடம் சண்டை போடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனிடையே சம்பவத்தன்று போதையில் வீட்டுக்கு வந்த தொழிலாளி சிறுமியை குண்டம்மா முகாமில் இருக்கும் தன்னுடைய நண்பர் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளார். பிறகு சிறுமியை சிற நாட்கள் நண்பரின் வீட்டில் தங்கும் படி கட்டாயப்படுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அங்கு தங்கிய சிறுமியை தந்தையின் நண்பர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக மறுநாள் காலையில் சிறுமி அவரது தந்தையிடம் கூறிய நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத தந்தை, என் நண்பனுக்கு தான் உன்னை திருமணம் செய்து வைக்கப் போகிறேன், இது பற்றி வெளியில் யாரிடமும் சொன்னால் உன் அம்மாவை கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டி உள்ளார். இதனால் சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். பிறகு தந்தையின் நண்பன் சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயன்ற போது சிறுமியை தாய் காப்பாற்றி விசாரித்த போது அனைத்து உண்மையையும் தனது தாயிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து தாயின் உதவியுடன் சிறுமி போலீசில் புகார் அளித்த நிலையில் தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சிறுமியின் தந்தை மற்றும் அவருடைய நண்பரை தேடி வருகின்றனர்..
