தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது, முதலமைச்சர் விஜய் “டாஸ்மாக் கட்சி நிதி” எனக் குறிப்பிட்டதாகக் கூறி திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் வகையில் ஒரு குட்டிக்கதையைக் கூறினார். வெயிலில் எதையோ தேடிக் கொண்டிருந்த முதியவர் ஒருவர், தன்னிடம் கேள்வி கேட்ட சிறுவனிடம் “உன் அப்பாவைத் தேடுகிறேன்” என்று கூறியதாக அவர் குறிப்பிட்டதோடு, எதிர்க்கட்சிகளைப் போல தம்மாலும் சம்பந்தமில்லாத கதைகளைச் சொல்ல முடியும் என விமர்சித்தார். இந்த குட்டிக்கதை அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திமுக தொழில்நுட்பப் பிரிவு தனது எக்ஸ் தளப் பக்கத்தில் முதலமைச்சர் விஜயைக் கடுமையாகச் சாடியுள்ளது. சட்டமன்றம் என்பது மக்களின் பிரச்சினைகளை விவாதிக்கும் மாண்புமிகுந்த இடம் என்று சுட்டிக்காட்டியுள்ள அந்தப் பதிவு, விஜயை “இன்ஸ்டா அரசன்” என விமர்சித்துள்ளது. மேலும், அவரது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில், “உங்க குடும்பம் எங்கே சார்? அவர்களை ஏன் இப்படி நடுத்தெருவில் கைவிட்டீர்கள்?” என்ற வரிகளையும் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
அரசியல் ரீதியான விமர்சனமாகத் தொடங்கிய இந்த மோதல், தற்போது முதலமைச்சரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கடுமையான குற்றச்சாட்டுகள் வரை சென்றுள்ளதால் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜயின் குட்டிக்கதை மற்றும் அதற்கு திமுக அளித்துள்ள இந்தத் தனிப்பட்ட பதிலடி ஆகிய இரண்டில் எது இணையத்தில் அதிகளவில் வைரலாகும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்கள் மற்றும் சமூக ஊடகப் பயனர்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது.
