சீனாவின் சிச்சுவான் மாகாணத் தெருக்களில் மனிதனைப் போன்ற தோற்றம் கொண்ட ‘ஹியூமனாய்டு’ ரோபோ ஒன்று மண்டியிட்டு, கைகளைக் கூப்பி பிச்சை எடுக்கும் வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘யுனிட்ரீ ஜி1’ என்ற அதிநவீன ரோபோதான் இவ்வாறு பொதுவெளியில் மண்டியிட்டு பிச்சை எடுத்துள்ளது. அதன் அருகில் வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கி மற்றும் எல்.இ.டி திரையில், “பேட்டரியை ரீசார்ஜ் செய்யப் பணமில்லை, கரண்ட் பில் கட்ட உதவுங்கள்” என்ற மெசேஜ் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு பெயர்போன சீனாவில், இந்த ரோபோவின் அருகில் காசுகளைப் போடுவதற்கான தட்டு மட்டுமன்றி, ஆன்லைனில் பணம் அனுப்புவதற்காக ‘க்யூஆர் கோடு’ ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டுள்ளது. தெருவில் செல்பவர்கள் பலரும் இந்த விசித்திரக் காட்சியை ஆச்சரியத்துடன் பார்த்து, தங்கள் மொபைல் மூலம் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து டிஜிட்டல் முறையில் பிச்சை போடும் காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. பெய்ஜிங், செங்டு போன்ற பல முக்கிய நகரங்களிலும் இது போன்ற ‘ரோபோ பிச்சைக்காரர்கள்’ உலா வரத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தொழில்நுட்பக் கூத்து இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. நெட்டிசன்கள் பலரும், “ஏற்கனவே கார்ப்பரேட் வேலைகளைப் பறித்த ஏஐ , இப்போது பிச்சைக்காரர்களின் வேலையையும் பறிக்கத் தொடங்கிவிட்டதா?” என நகைச்சுவையாகவும் கவலையோடும் கமெண்ட் செய்து வருகின்றனர். எனினும், இது நிஜமாகவே பிச்சை எடுப்பதற்காக நடத்தப்படவில்லை என்றும், சம்பந்தப்பட்ட ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தின் ஒரு புத்திசாலித்தனமான விளம்பர உத்தி அல்லது நவீன கலை நிகழ்ச்சி என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
