சென்னையில் இன்று காலை அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். அமைச்சர் சரத்குமார் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி, சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே திரண்ட திமுகவினர் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்று கூறி அவர்களைக் கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.
எனினும், தடையை மீறி ஆர்ப்பாட்டம் தொடர்ந்ததால், 100-க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் குண்டுக்கட்டாகக் தூக்கிச் சென்று கைது செய்தனர். சென்னையைத் தொடர்ந்து புதுக்கோட்டை மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களிலும் இந்த விவகாரம் தொடர்பாக திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
