பார்க்கிங் தகராறு..! “ஜூஸ் குடிக்க வந்த குடும்பம்… காரை நிறுத்திய பெண்களைத் தாக்கிய திமுக கவுன்சிலர்… அதிரடி காட்டிய போலீஸ்…!!

By Gayathri on ஆவணி 23, 2026

Spread the love

செங்கல்பட்டு மாவட்டம் பாலூரைச் சேர்ந்த ரேகா என்பவர், தனது குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிக்காக துணி எடுப்பதற்காக செங்கல்பட்டு வந்துள்ளார். அவர்கள் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு கடைக்குச் சென்றபோது, சாலையோரம் இருந்த ஹோட்டல் ஒன்றின் முன்பு தங்களது காரை நிறுத்தியுள்ளனர். அப்போது, காரை அகற்றுவது தொடர்பாக அந்த ஹோட்டல் ஊழியர்களுக்கும் ரேகாவின் குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றிய நிலையில், ஹோட்டல் உரிமையாளரும் செங்கல்பட்டு திமுக நகர செயலாளருமான நரேந்திரன், 30-வது வார்டு திமுக கவுன்சிலர் சந்தோஷ் மற்றும் அங்குள்ள ஊழியர்கள் சிலர் ஒன்றிணைந்து ரேகாவின் குடும்பத்தினரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்த அவர்கள், உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ரேகா தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், செங்கல்பட்டு நகர காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதன் விளைவாக, திமுக பிரமுகர்களான நரேந்திரன், சந்தோஷ் மற்றும் ஹோட்டல் ஊழியர்களான மோகன், சூரியா ஆகிய நான்கு பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். இவர்கள் மீது பெண்களைத் துன்புறுத்துதல், ஆபாசமாகப் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. பின்னர், கைது செய்யப்பட்ட நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, செப்டம்பர் 4-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கார் நிறுத்திய விவகாரத்தில் ஏற்பட்ட மோதலால் ஆளுங்கட்சி நிர்வாகிகள் சிறைக்குச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.