“MLA-வுக்கு கார் கொடுக்கத் தெரியுது… சம்பளம் கொடுக்க வரலையா?”… அரசுக்கு சவால் விட்ட தூய்மைப் பணியாளர்கள்….!

By Nanthini on ஆவணி 23, 2026

Spread the love

சென்னை மாநகராட்சி ஆணையருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் பாரதி செய்தியாளர்களைச் சந்தித்து அரசின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டித்தார். அரசு பெண் ஊழியர்களின் மூன்றாவது பிரசவத்திற்கு ஓராண்டு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும் அரசு, தூய்மைப் பணியாளர்களின் முதல் பிரசவத்திற்குக்கூட ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிப்பதில்லை என அவர் சாடினார். மேலும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் மற்றும் எரிபொருள் செலவுகளுக்கு ரூ.75,000 வழங்கும் அரசு, பல ஆண்டுகள் உழைத்த தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.19,000 மட்டுமே வழங்குவது அநீதி என்றும், சட்டமன்ற உதவியாளருக்கு ரூ.25,000 சம்பளம் நிர்ணயிக்கும் முதலமைச்சரால் தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.25,000 கூட வழங்க முடியாதா என்றும் கேள்வி எழுப்பினார்.

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளான ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் குறித்து முறையான தீர்வு எட்டப்படவில்லை. மேலும், முதலமைச்சரை நேரில் சந்தித்து இது குறித்துப் பேசுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பாரதி குற்றம்சாட்டினார். பல தலைமுறைகளாக நகரத்தின் தூய்மையைப் பராமரிக்கும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு புறக்கணிப்பதாகத் தெரிவித்த அவர், தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த உடனடியாக குறைந்தபட்ச ஊதியமாக ரூ.25,000 வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.