தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வராஜ் நேற்று (ஏப்ரல் 10) தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் அப்பகுதி மக்களிடம் ஆதரவு கோரிச் சென்றபோது, எதிர்பாராத விதமாக பொதுமக்கள் அவரிடம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, கடந்த தேர்தலின் போது திமுக அளித்த “டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும்” என்ற வாக்குறுதி என்னவானது? என்று பொதுமக்கள் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியதால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், தங்கள் பகுதிக்குத் தேவையான எந்தவொரு அடிப்படை நலத்திட்டங்களும் முறையாக வந்து சேரவில்லை எனக்கூறி மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். மக்களின் இந்தத் தொடர் எதிர்ப்பாலும், அடுக்கடுக்கான கேள்விகளாலும் திணறிய வேட்பாளர் செல்வராஜ், மேற்கொண்டு பதில் அளிக்க முடியாமல் அங்கிருந்து பாதியிலேயே கிளம்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சி வேட்பாளருக்கு மக்களிடையே கிளம்பியுள்ள இந்த எதிர்ப்பு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
