தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒரு அதிரடியான கோரிக்கையை முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாமகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளை விட, தேமுதிகவுக்கு ஒரு தொகுதி கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்பதே அந்த முக்கிய நிபந்தனை. கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு பாமக சென்றபோது, தேமுதிக உறுதியாக அதிமுகவுடன் நின்றதைச் சுட்டிக்காட்டி இந்த உரிமையை அவர் கோரி வருகிறார்.
தேமுதிக தரப்பில் சுமார் 18 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் கேட்கப்படுவதாகத் தெரிகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 35 ஆயிரத்திற்கும் அதிகமான பூத் கமிட்டிகள் தேமுதிகவுக்கு இன்றும் வலுவாக இருப்பதாகவும், பாமகவை விட கட்சியின் கட்டமைப்பு சிதையாமல் இருப்பதாகவும் பிரேமலதா வாதிடுகிறார். திமுக கூட்டணியில் இருந்தும் தேமுதிகவுக்கு அழைப்புகள் வந்து கொண்டிருக்கும் சூழலில், அதிமுகவிடம் தனது செல்வாக்கை நிரூபிக்கவும், பாமகவை விட கூடுதல் முக்கியத்துவம் பெறவும் தேமுதிக பிடிவாதம் காட்டி வருகிறது.
இந்த எதிர்பாராத டிமாண்டால் அதிமுக தலைமை மிகுந்த கலக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே பாமகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்த முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ள நிலையில், தற்போது தேமுதிகவின் இந்தக் கூடுதல் நிபந்தனை எடப்பாடி பழனிசாமிக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. வட மாவட்டங்களில் பாமக மற்றும் தேமுதிக ஆகிய இரு கட்சிகளுமே கணிசமான வாக்கு வங்கியை வைத்துள்ளதால், யாரையும் விட்டுக்கொடுக்க முடியாமல் சமரசப் பேச்சுவார்த்தைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்ற ஆலோசனையில் அதிமுக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.
