“சீட் இல்லைன்னா என்ன, கவலைப்படாதீங்க”… நேர்காணலுக்கு வந்தவர்களிடம் இபிஎஸ் கொடுத்த ரகசிய வாக்குறுதி…

By Nanthini on தை 13, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. 10,000-க்கும் மேற்பட்டோர் விருப்பமனு அளித்துள்ள நிலையில், 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை தொகுதி வாரியாக நேர்காணல்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த நேர்காணலில் கே.பி. முனுசாமி மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் பங்கேற்று, கட்சிப் பணி மற்றும் மக்கள் சேவை குறித்த கேள்விகளைத் தொண்டர்களிடம் எழுப்பி வருகின்றனர்.

இருப்பினும், இந்த நேர்காணல் முறை விருப்பமனு அளித்தவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தனித்தனியாக நேர்காணல் நடத்தப்படாமல், ஏழு அல்லது எட்டு தொகுதிகளைச் சேர்ந்தவர்களை ஒட்டுமொத்தமாக அழைத்து எடப்பாடி பழனிசாமி பேசுகிறார் என்றும், இது ஒரு நேர்காணல் போல இல்லாமல் வெறும் ‘சம்பிரதாயமான’ சந்திப்பாகவே முடிந்துவிடுவதாகவும் அதிமுகவினர் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். தங்களின் தனிப்பட்ட உழைப்பையும், தொகுதியின் கள நிலவரத்தையும் விரிவாக எடுத்துரைக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதே இவர்களின் பிரதான புகாராக உள்ளது.

   

இந்த அதிருப்திகளை உணர்ந்த எடப்பாடி பழனிசாமி, நேர்காணலில் பங்கேற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசி வருகிறார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு, கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு வாரியப் பதவிகள் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் உரிய முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார். மேலும், கூட்டணி விவகாரங்கள் குறித்தும், வரும் நாட்களில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாகவும் அவர் சூசகமாகத் தெரிவித்ததுடன், கட்சி அறிவிக்கும் வேட்பாளரின் வெற்றிக்காக அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.