நடிகர் ரஜினியின் சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய ஹிட் கொடுத்த இயக்குனர் என்றால் அது சுரேஷ் கிருஷ்ணா தான். ரசிகர்களின் முதல் தேர்வும் இந்த படமாக தான் இருக்கும். பாட்ஷா மட்டுமல்லாமல் அண்ணாமலை, வீரா மற்றும் பாபா ஆகிய திரைப்படங்களையும் அவர்தான் இயக்கியிருந்தார். தமிழ் சினிமாவில் அண்ணாமலை திரைப்படம் பல முக்கியமான அம்சங்களை கொண்டிருந்தது. வழக்கமாக ரஜினி படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு பதில் தேவா அந்த படத்தில் ஒப்பந்தமானார். இயக்குனர் பாலசந்தர் ரஜினியின் கால் சூட் வாங்கிய பிறகு அப்போது உச்சத்தில் இருந்த விசுவை தான் இயக்குனராக நியமித்தார். ரஜினியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் விலகிய நிலையில் அந்த வாய்ப்பு இயக்குனர் வசந்தத்தைச் சென்றது.
படப்பிடிப்புக்கு இரண்டு நாட்கள் முன்பு அவர் படத்தை விட்டு விலகியதால் இறுதியாக அந்த வாய்ப்பு சுரேஷ் கிருஷ்ணாவுக்கு கிடைத்தது. ரஜினியின் படங்கள் என்றாலே பாம்பு சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற வேண்டும். அப்படி இடம்பெற்றால் படம் கட்டாயம் வெற்றி பெறும் என்ற சென்டிமென்ட் உள்ளது. பைரவி திரைப்படம் தொடங்கி தம்பிக்கு எந்த ஊரு, அண்ணாமலை மற்றும் எந்திரன் என பல படங்களில் பாம்பு தொடர்பான காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அண்ணாமலை படத்தில் பாம்பை நடிக்க வைக்கலாம் என்று திட்டமிட்டதும் முதலில் படத்தின் வசனகர்த்தா வசனம் எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால் பாம்பை கண்டு பயத்தில் இருக்கும் போது வசனம் வேண்டாம் என்று இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா கூறியுள்ளார்.
இந்த சீன் உண்மையிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த சீனுக்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான சம்பவமும் நிறைந்துள்ளது. இது குறித்து சுரேஷ் கிருஷ்ணா சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார். அதில், அண்ணாமலை படத்தில் ரஜினி நடித்த பாம்பு சீன் உண்மையிலேயே ஒரு பாம்பை வைத்து தான் எடுக்கப்பட்டது. அந்த சீன் எடுக்கும்போது அங்க இருக்க எல்லோருமே ரொம்ப சைலன்ட்டா இருந்தோம். ரஜினி மட்டும் ஆடாம அசையாம அமர்ந்து கொண்டிருந்தார். பாம்பை பெட்டியில் இருந்து திறந்து விட்டதும் ரஜினியின் மேல் ஆங்காங்கே ஊர்ந்து சென்றது. பாம்புக்கு வாய் தைக்கப்பட்டு இருந்ததால் ரஜினியும் எந்த பயமும் இல்லாமல் அப்படியே உட்கார்ந்து ஆ ஊ என ரியாக்ஷன் மட்டும் கொடுத்துக் கொண்டிருந்தார்.
ஒருவழியாக அந்த சீன் எடுக்கப்பட்டதும் பாம்பு ரஜினி மேலே இருந்து ஊர்ந்து சென்று வெளியே சென்று விட்டது. பிறகு ஒரு வழியாக காட்சியை எடுத்து விட்டோம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது வெளியில் ஏதோ சத்தம் கேட்டது. என்னவென்று சென்று பார்த்தால் பாம்பு பிடிக்கும் அந்த நபர் வெளியில் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். என்ன சண்டை என்று போய் விசாரித்தால் அந்த பாம்புக்கு வாயே தைக்கப்படவில்லையாம். அந்த சீன் எடுத்து முடித்த பிறகு தான் அந்த விஷயமே எங்களுக்கு தெரிந்தது. கொஞ்சம் அசந்து இருந்தா கூட அன்னைக்கு ரஜினி காலியாயிருப்பாரு, என்னோட வாழ்க்கையும் முடிஞ்சிருச்சின்னு நெனச்சேன் என்று சுரேஷ் கிருஷ்ணா கலகலப்பாக சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.