தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஆர் கே செல்வமணி கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின்போது தயாரிப்பாளர்களுக்குள் ஒற்றுமை கிடையாது, பெப்சி அமைப்பை அழித்து புதிய அமைப்பை உருவாக்க நினைக்கின்றனர், அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என்று பேசி இருந்தார். நேற்று 5 ஸ்டார் கிரியேஷன் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் கலைச்செல்வி தனுஷ் அவர்களின் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து பெற்ற முன்பனத்திற்கு இன்று வரை கால் சூட் தரவில்லை என்று கூறி அறிக்கை வெளியிட்டு பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணிக்கு பல கேள்விகளை கேட்டிருந்தார்.
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் தற்போது பேசியுள்ள ஆர் கே செல்வமணி, எனக்கு இப்போது 60 வயது கடந்து விட்டது. இந்த 60 ஆண்டுகளில் நான் மிகவும் வேதனையாக இருந்த நாள் நேற்று தான். என்னுடைய தாய் தந்தையாரை எதிர்த்து நிற்கும் போது எந்த அளவுக்கு வேதனைக்கு ஆளானேனோ அந்த அளவுக்கு நேற்றைய தினம் வேதனையுடன் இருந்தேன். தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு என்னை போல் நன்மை செய்தவர்கள் யாருமே இருக்க முடியாது. இதுவரை பொறுப்பில் இருந்த நிர்வாகிகள் தற்போது பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள் யாரும் அவ்வளவு நன்மைகளை செய்திருக்க மாட்டார்கள்.
சிரமமான சூழல்களுக்கு எங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு யாரெல்லாம் எதிரியோ அவர்களை எதிர்ப்பதற்கு எங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று நாங்கள் சொல்லி இருக்கிறோம். எந்த ஈகோவும் இல்லாமல் அவர்கள் அழைக்கும் போதெல்லாம் நாங்கள் சென்று இருக்கிறோம். பல நாட்கள் அவர்கள் இல்லாமல் கூட திரும்பி உள்ளோம். பல மணி நேரம் கூட காத்திருப்போம். ஆனால் அதைப் பற்றி எனக்கு எந்த கவலையும் கிடையாது. தமிழ் சினிமா சரியான திசையில் செல்ல வேண்டுமென்றால் தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றாக இருந்தால்தான் முடியும் என்பதை யோசித்து தான் நான் அதை செய்திருக்கிறேன். அவர்களின் புரிதல் இன்மைக்கு நான் எதுவும் பண்ண முடியாது.
மேடைக்கு அனைத்து தயாரிப்பாளர்களை அழைத்து வாருங்கள். அங்கு நான் ஏதாவது தவறு செய்திருந்தால் அதனை திருத்திக் கொள்கிறேன். தமிழ் சினிமா சரியான பாதையில் திட்டமிட்டு பணிகளை மேற்கொள்வதற்கு கஷ்டப்பட்டு ஒரு விஷயத்தை கொண்டு வந்திருக்கிறோம். ஆனால் இன்று வரை அவர்கள் கையெழுத்து போடவில்லை. இந்த விஷயம் அவர்கள் நூறு வருடங்கள் போராடினாலும் பண்ண முடியாதது. எங்களால் முடிந்த அத்தனை விஷயங்களையும் அவர்கள் கேட்காமல் நான் செய்து கொடுத்துள்ளேன். நான் இன்றைக்கு பணம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் சுய ஒழுக்கத்தில் என்னை விட சிறந்தவன் யாருமில்லை. என்னுடைய சினிமா, குடும்பம் மற்றும் பதவி என அனைத்தையும் விட என்னுடைய சுயமரியாதை தான் எனக்கு பெரியது என்று ஆர் கே செல்வமணி பேசியுள்ளார்.