‘ஆண் பாவம்’ படத்தில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியை பேசவைத்த பாண்டியராஜன்.. எப்படி தெரியுமா?

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் நகைச்சுவை அம்சத்தோடு வரும் படங்களுக்கு எப்போதுமே  மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கும். பாமா விஜயம், காதலிக்க நேரமில்லை முதல் ஆண்பாவம், உள்ளத்தை அள்ளித்தா என இந்த பட்டியல் நீளும். இப்படி 1985 ஆம் ஆண்டு  வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமான ஆண்பாவம் இன்றளவும் கொண்டாடப்படும் ஒரு படமாக அமைந்துள்ளது.

கன்னிராசி மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் பாண்டிராஜனின் இரண்டாவது படம் ஆண்பாவம். பாண்டியனோடு அவரும் ஒரு கதாநாயகனாக அந்த படத்தில் நடித்திருந்தார். அண்ணன் தம்பியான பெரிய பாண்டி, சின்ன பாண்டி ஆகியவர்களின் குறும்புத்தனமான வாழ்க்கையில் திருமணம் குறுக்கிடும்போது ஏற்படும் குழப்பங்களும், அதன் பின்னான முடிவுகளுமே இந்த படத்தின் கதை.

   

இந்த படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை வயிறுவலிக்க சிரிக்க வைக்கும் விதமாக திரைக்கதை அமைத்திருந்தார் பாண்டியராஜன். இந்த படத்தில் ரேவதி கதாபாத்திரம் கிணற்றில் விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்.

அவரை பரிசோதித்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ரேவதி கிணற்றில் விழுந்த அதிர்ச்சியில் பேசும் திறனை இழந்துவிட்டதாக சொல்வார். இந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் பாண்டியராஜனின் நண்பர். அவரால் வாய் பேச முடியாது என்பது பலருக்கும் தெரியாது. அவரிடம் வசனங்களைக் கொடுத்து படிக்க சொல்லி, அதற்கேற்றார் போல வாயசைக்க சொல்லி விட்டாராம்.

பின்னர் டப்பிங்கில் அவரின் வாயசைவுக்கு ஏற்ப வசனங்களைப் பேசிக்கொண்டார்களாம். இந்த காட்சியை தியேட்டரில் பார்த்துவிட்டு அந்த நண்பரும் அவரின் குடும்பத்தினரும் மிகவும் நெகிழ்ந்து போய் பாண்டியராஜனிடம் வந்து நன்றி தெரிவித்துக் கொண்டார்களாம்.

இந்த சுவாரஸ்யமான தகவலை பல ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் பாண்டியராஜன் அந்த படத்துக்காக நடந்த ஒரு பாராட்டு விழாவில் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த சம்பவத்தை சொல்லி ‘இதில் நான் ஒன்றுமே செய்யவில்லை. சினிமாதான் அந்த மேஜிக்கை செய்தது” எனக் கூறியுள்ளார்.