இயக்குனர் மிஷ்கின் எப்போதுமே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாதவர். அவருடைய இயக்கத்தில் பிசாசு 2 மற்றும் ட்ரெயின் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு காத்திருக்கின்றன. அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து வரும் மிஸ்கின் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாட்டில் ராதா படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது மரியாதை குறைவாக பேசியது அனைத்து தரப்பினரையும் கோபப்பட வைத்தது. கெட்ட வார்த்தை பயன்படுத்தியது மட்டுமல்லாமல் இளையராஜா உள்ளிட்ட இசையமைப்பாளர்களை மரியாதை குறைவாக பேசி இருந்த நிலையில் மிஸ்கின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இப்படியான நிலையில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள டிராகன் திரைப்படம் பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் அனுபாமா, மரியம் ஜார்ஜ் மற்றும் சித்ரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட நிலையில் அப்போது மேடையில் பேசிய இயக்குனர் மிஷ்கின், நான் இன்று எதுவும் கெட்ட வார்த்தை பேசல. ஒரு கொம்பை அறுத்து எடுத்துட்டாங்க. இன்னும் ஒரு கொம்பு தான் இருக்கு.

நான் இது போன்ற மேடைகளுக்கு வராமல் ஒரு வருடம் இடைவெளி எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். பேட் கேர்ள் என்று ஒரு படத்தோட ட்ரெய்லர் வந்தது. அந்தப் படத்தை வெளிவரவிடாமல் போட்டு அமுக்குறாங்க. அந்தப் படத்தை ஒரு பெண் எடுத்திருக்கிறார். 20 வருஷத்துக்கு ஒரு பெண் இயக்குனர் தான் வராங்க. அந்தப் பெண்ணோட படம் வெளியே வரணும். அந்தப் பெண் கலங்கிட்டு இருக்காங்க. இந்த விஷயத்தை இங்கே நான் பதிவு பண்ண விரும்புகிறேன் என்று பேசிய மிஸ்கின் இடம் பட குழுவினரின் புகைப்படங்கள் காட்டப்பட்டது. தன்னுடைய புகைப்படத்தை பார்த்து மிஸ்கின், சினிமாவில் இருந்து சீக்கிரம் வெளிவர போகும் இயக்குனர் இவர்தான். ரொம்ப கோபத்தை கட்டுப்படுத்தி வச்சுட்டு இருக்கிற மனுஷன், போர் அடிச்சிருச்சு அதனால சீக்கிரம் சினிமாவை விட்டு வெளியேற போகும் இயக்குனர் இவர்தான் என கூறினார். மிஷ்கின் சினிமாவில் இருந்து விரைவில் வெளியேறவுள்ளதாக தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
