மத்திய அரசு, தேசிய அளவிலான தேர்வு முறைகளில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வெளிப்படைத் தன்மையையும் நம்பகத்தன்மையையும் உறுதிசெய்வதற்காக நந்தன் நீலகேனி தலைமையில் 6 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது. ஆதார் திட்டத்தின் முக்கிய சிற்பியான நந்தன் நீலகேனி தலைமையிலான இந்தக் குழுவில், இஸ்ரோ முன்னாள் தலைவர் எஸ். சோமநாத், முன்னாள் உளவுத்துறை இயக்குநர் தபன் தேகா, சென்னை ஐஐடி இயக்குநர் வி. காமகோடி, முன்னாள் கல்விச் செயலர் அனிதா கர்வால் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நிபுணர் அம்ரித் லால் மீனா ஆகியோர் உறுப்பினர்களாகச் செயல்படவுள்ளனர்.
தேர்வு சீர்திருத்தக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் வி. காமகோடி, கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர். கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், சென்னை ஐஐடியின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். குறிப்பாக, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் மைக்ரோபிராசஸரான ‘சக்தி’ திட்டத்தை வெற்றிகரமாகத் வழிநடத்திய பெருமை இவருக்கு உண்டு. மேலும், தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ள இவர், நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
அதேவேளையில், டாக்டர் காமகோடி அவர்களின் சில கருத்துக்கள் பொதுவெளியில் பெரும் விவாதங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளன. கடந்த 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், மாட்டுக்கழிவு மற்றும் கோமியத்தில் மருத்துவக் குணங்கள் இருப்பதாகத் தெரிவித்ததுடன், அது காய்ச்சலைக் குணப்படுத்தியதாகக் கூறிய சொந்த அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார். இருப்பினும், அலோபதி மருத்துவம் மற்றும் அதிகாரப்பூர்வ மருத்துவ அமைப்புகள் கோமியத்தின் மருத்துவப் பயன்களை அங்கீகரிக்காத நிலையில், ஒரு உயர்கல்வி நிறுவனத்தின் இயக்குநர் இவ்வாறு பேசியது தீவிர விமர்சனங்களுக்கு உள்ளானது.
தற்போது பல்வேறு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகள் மற்றும் தொழில்நுட்பச் சிக்கல்கள் குறித்த கவலைகள் எழுந்துள்ள சூழலில், இந்த புதிய உயர்மட்டக் குழுவின் உருவாக்கம் முக்கியத்துவம் பெறுகிறது. தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகத் துறைகளில் சிறந்து விளங்கும் வல்லுநர்களைக் கொண்ட இந்தக் குழு, தற்போதைய தேர்வு முறைகளை முழுமையாக ஆய்வு செய்து, எதிர்காலத்தில் எவ்வித குளறுபடிகளும் இல்லாதவாறு அதிநவீன, பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான தேர்வு முறையை உருவாக்கத் தேவையான பரிந்துரைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
