தருமபுரி மண்டல நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வரும் அரிமா செந்தில்நாதனை அப்பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கக் கோரி, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தீவிரமாகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மேலும், அரிமா செந்தில்நாதன் தங்கள் தொகுதிக்குள் வரக்கூடாது எனத் திட்டவட்டமாக எதிர்ப்பு தெரிவித்து தலைமைக்குத் தொடர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்த உட்கட்சிப் பூசல் மற்றும் நிர்வாகிகள் காட்டும் எதிர்ப்பால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாகக் கோபமடைந்துள்ளார்.
மாவட்ட நிர்வாகிகளின் தொடர் அழுத்தத்தால் ஆத்திரமடைந்த சீமான், அவர்களிடம் கண்டிப்புடன் பேசும் தொலைபேசி ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்த ஆடியோவில், ” தலைமை நியமிக்கும் நிர்வாகி உங்கள் தொகுதிக்குள் வரக்கூடாது என்றால், நாளை நானாவது உங்கள் தொகுதிக்கு வரலாமா? அல்லது நாளை என்னையுமே கட்சியிலிருந்து விலகச் சொல்வீர்களா?” எனத் தொண்டர்களின் போக்கைக் கடுமையாகக் கண்டித்து வினாக்களை எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து ஆவேசமாகப் பேசிய சீமான், “கட்சித் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குபவர்கள் அப்படியே வேறு ஏதாவது கட்சியில் போய்ச் சேர்ந்துவிட வேண்டியதுதானே? உங்கள் விருப்பப்படி இயங்கும் கட்சிகளை நோக்கிச் செல்லுங்கள். நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை தலைமை என்ன சொல்கிறதோ, அதன்படிதான் அனைவரும் நடக்க வேண்டும். அனைவரும் கட்சிப் பணிகளை ஒழுங்காகச் செய்திருந்தால் நாம் இன்னும் பெரிய அளவில் வளர்ந்திருப்போம். விருப்பம் இருந்தால் கட்சியில் இருங்கள், இல்லையென்றால் வெளியேறி விடுங்கள்” என எச்சரிக்கும் தொனியில் பேசியுள்ளார்.
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் இந்த அதிரடியான பேச்சு, தருமபுரி மாவட்ட நாதக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே உட்கட்சிப் பூசலால் தவித்து வந்த தருமபுரி மாவட்ட நாம் தமிழர் கட்சிக்குள், இந்த ஆடியோ விவகாரம் மேலும் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
