தமிழ் சினிமாவின் அடையாளமாக இருப்பவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. அவரது படங்களை இப்போதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் தனது மகன் மனோஜ் பாரதி மறைவால் மிகவும் மனம் உடைந்து போன பாரதிராஜா, முதுமை காரணமாக நினைவாற்றலை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவதாக அவரது சகோதரர் ஜெயராஜ் கூறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் தனுஷூக்கு இயக்குனர் பாரதிராஜா செல்போனில் இருந்து பண உதவி கேட்டு மெசேஜ் வந்துள்ளது. திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் உடன் பாரதிராஜா நடித்திருந்ததால், அப்போது அவருக்கு சம்பளம் அனுப்பிய அதே வங்கி கணக்கில் ரூ. 15 லட்சத்தை தனுஷ் தரப்பில் இருந்து அனுப்பியிருக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து இயக்குனர் பாரதிராஜா செல்போனில் இருந்து பல நடிகர்கள் நடிகைகள் மற்றும் இயக்குனர்களுக்கு இதே போல் பண உதவி கேட்டு மெசேஜ் சென்றுள்ளது. இதே போல் நடிகர் ரஜினிகாந்துக்கும் மெசேஜ் சென்றுள்ளது. இதைப் பார்த்து ரஜினிகாந்த் அதிர்ச்சியாகி உள்ளார். அவரது உதவியாளர் சுப்பையா மூலம் இதுகுறித்து விசாரிக்கவும் சொல்லியிருக்கிறார்.
ஆனால் பண உதவி கேட்டு பாரதிராஜா பயன்படுத்தும் செல்போன் எண்ணில் இருந்து மெசேஜ் சென்றாலும், அவர்கள் குறிப்பிட்டு சொல்லும் வங்கி கணக்கு பாரதிராஜாவுக்கு சொந்தமானது இல்லை. வேறு ஒருவர் பெயரில் உள்ள வங்கி கணக்கில் பாரதிராஜாவுக்கு பணம் அனுப்புமாறு கூறப்பட்டுள்ளது. உண்மையில் இது பாரதிராஜா தான் உதவி கேட்கிறாரா, அல்லது அவரது பெயரை பயன்படுத்தி மோசடி நடக்கிறதா என்ற குழப்பமும் சந்தேகமும் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
