தமிழ் சினிமாவில் தன்னுடைய கதைகளில் ரௌத்திரத்தை ஏற்றி பார்வையாளர்களை திகைத்துப் போக வைக்கும் படங்களை எடுத்தவர் இயக்குனர் பாலா. அவர் இயக்கிய சேது, பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்கள் அவற்றின் உருவாக்கத்தால் இன்றளவும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கின்றன. அவர் படங்களில் நடித்த பின்னர்தான் விக்ரம், சூர்யா மற்றும் ஆர்யா ஆகியோர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தனர்.
அதனால் அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதில் பல இளம் ஹீரோக்கள் ஆர்வமாக இருந்தார்கள். அவர் படங்களில் கதாநாயகர்கள் பெரிய அளவுக்கு உயர்ந்தாலும், கதாநாயகிகள் போன இடம் தெரியாமல் காணாமல் போனார்கள். பாலா தன்னுடைய சுயசரிதைப் புத்தகமான ‘இவன்தான் பாலா’வில் தன்னுடைய வாழ்க்கையை எந்த ஒளிவு மறைவுமின்றி பகிர்ந்துள்ளார். ஒரு போக்கிரியாக இருந்த தன்னை சினிமாதான் மனிதனாக்கியது என்று கூறியுள்ளார்.
அப்படி அவரை பண்படுத்தியதில் அவரின் குருநாதரான பாலு மகேந்திராவுக்கு முக்கியமானப் பங்குண்டு. தற்போது அருண் விஜயை வைத்து வணங்கான் படத்தை எடுத்துள்ளார். பொங்கலுக்கு வெளியாகி இருக்கிறது. இதற்கிடையில் பாலா திரையுலகில் 25 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை அடுத்து அவருக்குப் பாராட்டு விழாவும் சமீபத்தில் நடந்தது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய பாலா, “பரதேசி, நான் கடவுள் ஆகிய இரண்டு படங்களுமே நடந்த உண்மையை சொல்லும் படம். இது மத்தவங்களுக்காக பண்ணின படம். அதனால் இன்ஸ்க்கு ரொம்ப பிடிச்ச படங்கள். மீதி படங்கள் எனக்காகவும், ஆர்டிஸ்ட்க்காவும் பண்ணின் படம்” என்று கூறியுள்ளார்.