தமிழ் சினிமாவில் தன்னுடைய கதைகளில் ரௌத்திரத்தை ஏற்றி பார்வையாளர்களை திகைத்துப் போக வைக்கும் படங்களை எடுத்தவர் இயக்குனர் பாலா. அவர் இயக்கிய சேது, பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்கள் அவற்றின் உருவாக்கத்தால் இன்றளவும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கின்றன.
அவர் படங்களில் நடித்த பின்னர்தான் விக்ரம், சூர்யா மற்றும் ஆர்யா ஆகியோர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தனர். அதனால் அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதில் பல இளம் ஹீரோக்கள் ஆர்வமாக இருந்தார்கள். அவர் படங்களில் கதாநாயகர்கள் பெரிய அளவுக்கு உயர்ந்தாலும், கதாநாயகிகள் போன இடம் தெரியாமல் காணாமல் போனார்கள்.
பாலா தன்னுடைய சுயசரிதைப் புத்தகமான ‘இவன்தான் பாலா’வில் தன்னுடைய வாழ்க்கையை எந்த ஒளிவு மறைவுமின்றி பகிர்ந்துள்ளார். ஒரு போக்கிரியாக இருந்த தன்னை சினிமாதான் மனிதனாக்கியது என்று கூறியுள்ளார். அப்படி அவரை பண்படுத்தியதில் அவரின் குருநாதரான பாலு மகேந்திராவுக்கு முக்கியமானப் பங்குண்டு.

சேது படத்தின் மூலம் கவனம் பெற்ற பாலா அடுத்து இயக்கிய திரைப்படம் ‘நந்தா’. அந்த படம்தான் சூர்யாவின் சினிமா கேரியரில் முக்கியமானத் திருப்புமுனை படமாக அமைந்தது. அந்த படத்தில் தன் தாயின் கையால் ஒருகை சாப்பாடு சாப்பிடவேண்டும் என்று ஆசைப்படும் மகனுக்கு தாயே விஷத்தை ஊட்டுவதாக க்ளைமேக்ஸ் அமைத்திருப்பார். அந்த க்ளைமேக்ஸ் இன்றளவும் பேசப்படும் ஒன்றாக அமைந்தது.
இதுபற்றி பேசியுள்ள பாலா “நான் 40 ஆண்டுகளுக்கு முன்னர் தனியாவர்த்தனம் என்றொரு படம் பார்த்தேன். அதன் க்ளைமேக்ஸ் என்னை ரொம்ப பாதித்தது. அதில் பயித்தியக்காரன் என கேலி செய்யப்படும் மகனை தன் தாயே விஷம் வைத்துக் கொன்றுவிடுவார். அந்த க்ளைமேக்ஸை வைத்துக்கொண்டு பின்னோக்கி உருவாக்கியதுதான் நந்தா திரைப்படம்” எனக் கூறியுள்ளார்.
