தமிழ் சினிமாவில் தனக்கு முன்னோடி இல்லாத நடிகர்களில் ஒருவர் எம் ஆர் ராதா. தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர். மேடை நாடகத்தில் முடி சூடா மன்னனாக விளங்கியவர். 1930 மற்றும் 40 களிலேயே சில படங்களில் நடித்தாலும், நாடகம் அளவுக்கு அவருக்கு சினிமா பிடிக்கவில்லை. அதனால் நாடகங்களிலேயே கவனம் செலுத்தினார்.
அதன் பிறகு பத்தாண்டுகளுக்குப் பிறகு 1954 ஆம் ஆண்டு ரத்தக் கண்ணீர் திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பின்னர் அவருக்கு குணச்சித்திர நடிகராக மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த படம் என்றால் அது சிவாஜியோடு அவர் இணைந்து நடித்த ‘பாகப்பிரிவினை’ திரைப்படம்தான். அந்த படத்தில் சிங்கபூரான் என்ற வேடத்தில் கலக்கி இருப்பார் ராதா. ராதாவை நம் படத்தில் போட்டால் அவரே நகைச்சுவை மற்றும் வில்லத்தனம் என இரண்டையும் பார்த்துக்கொள்வார் என அவரை எல்லா படத்திலும் புக் பண்ண ஆரம்பித்தனர்.
எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி ஆகிய இருவரும் தமிழ் சினிமாவில் இருபெரும் நடிகர்களாக உருவாகி வந்த காலத்தில் கூட அவர்களுக்காக பணிந்து போகாதவர் எம் ஆர் ராதா. இருவரும அவரை மரியாதையோடு “அண்ணே” என்றுதான் அழைப்பார்கள். அப்படி இருந்த நிலையில் ஒருநாள் எம் ஜி ஆரோடு எம் ஆர் ராதா முரண்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் எம் ஆர் ராதா பற்றி பேசியுள்ள அவருடைய மகன் ராதாரவி “எங்கப்பா நடிச்ச ரத்தக் கண்ணீர் திரைப்படம் வந்த போது அவரின் நடிப்பைப் பார்த்து மிரண்ட பலரும் அவருக்கு உண்மையாகவே குஷ்டம் வந்துவிட்டதாக நினைத்தார்கள். அதனால்தான் சில ஆண்டுகள் அவருக்குப் படம் வரவில்லை போல.
அதன் பின்னர் பாகப்பிரிவினை வந்து அவரை புகழின் உச்சத்துக்குக் கொண்டு சென்றது. அதன் பின்னர் ‘ராதா இல்லாத படம் சாதா’ என சொல்லுமளவுக்கு அவரின் புகழ் இருந்தது” எனக் கூறியுள்ளார்.