தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் பருத்திவீரன் திரைப்படம் தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கு மற்றும் கருத்து வேறுபாடுகள் கடந்த சில நாட்களாக ஒவ்வொன்றாக வெளியாகி கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் அமீருக்கு ஆதரவாக இயக்குனர்கள் பலரும் குரல் கொடுத்து வர அமீரை தேவையில்லாமல் விமர்சித்து அதன் பிறகு பல பக்கங்களில் இருந்து கண்டனம் வந்ததும் வருத்தம் கேட்பதாக கூறி ஞானவேல் ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இந்த நிலையில் இயக்குனர் அமீர் சமீபத்தில் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பருத்திவீரன் படத்தோடு பிரச்சனை நின்று விடவில்லை. அதன் பிறகு யோகி திரைப்படத்தை தயாரித்து நடித்து அதன் ரிலீஸுக்காக லேப் வாசலில் காத்துக்கொண்டிருந்தபோது அந்த திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று கூறி ஒரே ஒரு நபர் மட்டும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த நபர் வேறு யாரும் கிடையாது ஞானவேல் ராஜா தான்.

இத்தனைக்கும் பருத்திவீரன் திரைப்படத்தில் அவர்தான் எனக்கு பாக்கி தொகை தர வேண்டியதாக முடிவு செய்யப்பட்டு அது கிடைக்காததால் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் யோகி திரைப்படத்தின் வெளியீட்டின் போது நான்தான் அவருக்கு பணம் தர வேண்டும் என்று கூறி யோகி திரைப்படத்தை நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். ஆனால் அதற்கான ஆவணங்களை அவரால் சமர்ப்பிக்க முடியாததால் அந்த பிரச்சனை முடிந்தது என பலருக்கும் அறியாத தகவலை தற்போது அமீர் வெளிப்படையாக கூறியுள்ளார்.
