அம்பர்நாத் ரயில் நிலையத்தில், வாக்கர் உதவியுடன் தண்டவாளத்தை கடக்க முயன்ற மாற்றுத்திறனாளி ஒருவர் நூலிழையில் பெரும் விபத்தில் இருந்து தப்பினார். அவர் பிளாட்பாரத்தில் ஏற சிரமப்பட்டபோது, அங்கு காத்திருந்த சக பயணிகள் அவரை விரைவாக மீட்டுப் பாதுகாப்பாக மேலே இழுத்தனர். அவர் காப்பாற்றப்பட்ட சில நொடிகளிலேயே அந்த தண்டவாளத்தில் மின்சார ரயில் ஒன்று வேகமாக வந்தது. இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் ரயில் நிலையத்தில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. 1-வது பிளாட்பாரத்தில் மட்டும் லிஃப்ட் வசதி உள்ள நிலையில், முக்கியமாகப் பயன்படுத்தப்படும் 2 மற்றும் 3-வது பிளாட்பாரங்களில் மின் தூக்கிகள் அல்லது நகரும் படிக்கட்டுகள் இல்லை என்று பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் பயணிகள் ஒரு பிளாட்பாரத்தில் இருந்து மற்றொரு பிளாட்பாரத்திற்குச் செல்ல மிகவும் சிரமப்படுவதாகவும், அவசரத்தில் பலர் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடப்பதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
பயணிகளின் இந்த புகார்களைத் தொடர்ந்து, மத்திய ரயில்வே நிர்வாகம் இதற்கு பதிலளித்துள்ளது. மும்பை ரயில்வே விகாஸ் கார்ப்பரேஷன் திட்டத்தின் கீழ் 1 மற்றும் 3-வது பிளாட்பாரங்களில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி டாக்டர் ஸ்வப்னில் நிலா தெரிவித்தார். மேலும், பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் அடுத்த ஒரு மாதத்திற்குள் இரண்டு புதிய நகரும் படிக்கட்டுகள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
