தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பனைவிளை கிராமத்தில் சுமார் 60 ஆண்டுகளாகப் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பழமையான ஊர்க் கிணற்றைத் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய பிரமுகரும், ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கிராம மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பல தலைமுறைகளாக அக்கிணற்றின் நிலத்தடி நீர் ஆதாரத்தைச் சார்ந்து வாழ்ந்து வரும் பொதுமக்கள் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியபோது, “கிணற்றைப் பயன்படுத்த முன்னோர்கள் பத்திரம் எழுதித் தரவில்லை, இது எங்களுக்குச் சொந்தமானது” என அமைச்சர் தரப்பில் கூறப்பட்டதாகவும், இனிமேல் அங்கு யாரும் குடிநீர் எடுக்கக் கூடாது என்று தடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் ஜெகதீஸ்வரி மீது ஏற்கனவே பல புகார்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பேனரில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் பெரிதாகவும், அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பெயர் சிறியதாகவும் அச்சிடப்பட்டிருந்தது. இதனால் அதிருப்தியடைந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை விழா மேடையிலேயே கடிந்து கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
மேலும், தமிழக வெற்றி கழகத்தின் முன்னாள் நிர்வாகி ஒருவரை காவல் நிலையத்தில் புகார் அளித்து, ஆடைகளைக் களைந்து அடிக்க வைத்து விடுவதாக அமைச்சர் ஜெகதீஸ்வரி மிரட்டல் விடுத்த ஆடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இவ்வாறாகப் பல்வேறு மறைமுகக் குற்றச்சாட்டுகளுக்கும் சர்ச்சைகளுக்கும் ஆளாகி வரும் அமைச்சர் மீது, தற்போது கிராம மக்கள் அளித்துள்ள இந்த கிணறு ஆக்கிரமிப்புப் புகாரும் சேர்ந்து பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
