அகமதாபாத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்தப் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீரை அவர் நகைச்சுவையாகக் கலாய்த்துள்ளது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த இறுதிப் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 255 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. சஞ்சு சாம்சன் அதிரடியாக 89 ரன்கள் விளாசினார். பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 159 ரன்களுக்குச் சுருண்டது. இதன் மூலம் 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா, தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது.
வெற்றிக்குப் பின் பதிவிட்ட தோனி, “அகமதாபாத்தில் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கும், ரசிகர்களுக்கும் வாழ்த்துக்கள். நீங்கள் விளையாடுவதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அத்துடன், எப்போதும் தீவிரமான முகத்துடன் காணப்படும் கௌதம் கம்பீரைப் பார்த்து, “பயிற்சியாளர் கம்பீர் சிரிப்பதைப் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது” என்று குறிப்பிட்டு ஜாலியாக வம்பிழுத்துள்ளார்.
மேலும், பும்ராவை ஒரு ‘சாம்பியன் பந்துவீச்சாளர்’ என்றும் தோனி புகழ்ந்துள்ளார். தோனி மற்றும் கம்பீர் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகக் காலங்காலமாகப் பேசப்பட்டு வரும் நிலையில், தோனியின் இந்தப் பதிவு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தோனியின் இந்த கலகலப்பான வாழ்த்துப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
View this post on Instagram
