“2027-ல் அழியப்போகும் அமெரிக்க படைகள்?”… உலக நாடுகளின் நடுங்க வைக்கும் சீனப் பேராசிரியரின் கணிப்பு…!!

By Muthu Mani on பங்குனி 9, 2026

Spread the love

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றி மற்றும் ஈரான் மீதான போர் உள்ளிட்ட விவகாரங்களை முன்கூட்டியே துல்லியமாகக் கணித்த சீனப் பேராசிரியரின் புதிய கணிப்பு தற்போது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சீனப் பேராசிரியரான Xueqin Jiang, 2024 ஆம் ஆண்டிலேயே அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெறுவார் என்றும், அவர் ஈரான் மீது போர் தொடுப்பார் என்றும் தெரிவித்திருந்தார். அவர் கூறியது போலவே தற்போது பிப்ரவரி 28 ஆம் தேதி இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ள நிலையில், பேராசிரியரின் அடுத்தடுத்த கணிப்புகள் உலக நாடுகளை உற்றுநோக்க வைத்துள்ளன.

பேராசிரியர் Xueqin Jiang தனது கணிப்பில், ஈரான் மீதான அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்பை கிமு 415 இல் நடந்த ஏதென்ஸின் சிசிலி படையெடுப்புடன் ஒப்பிட்டுள்ளார். அந்தப் போரில் ஏதெனியன் பேரரசு தனது எதிரிகளின் பலத்தைக் குறைத்து மதிப்பிட்டதால் எவ்வாறு பலவீனமடைந்ததோ, அதேபோன்ற ஒரு நிலையை தற்போது அமெரிக்காவும் சந்திக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார். ட்ரம்ப் இந்த முடிவை எடுத்ததற்கு இஸ்ரேலின் அழுத்தம், மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்தும் ஆசை மற்றும் சவுதி அரேபியா – ஈரான் இடையிலான நீண்டகால மோதல் ஆகிய மூன்று முக்கிய காரணிகளை அவர் பட்டியலிட்டுள்ளார்.

   

மேலும், 2027 மார்ச் மாதம் ஈரான் மீது அமெரிக்கா ஒரு முழு அளவிலான தரைப்படைத் தாக்குதலை (Full-scale Invasion) நடத்தும் என்று அவர் கணித்துள்ளார். இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல், சவுதி அரேபியா, பிரித்தானியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளிக்கும் என்றும், ஈரானிய மக்களுக்கு ‘ஜனநாயகமும் சுதந்திரமும்’ பெற்றுத் தருவதாகக் கூறி ட்ரம்ப் இந்தப் போரை நியாயப்படுத்துவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஈரானின் மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் அங்குள்ள ஹிஸ்புல்லா, ஹமாஸ் போன்ற குழுக்களின் பலம் ஆகியவற்றால் அமெரிக்கப் படைகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து சின்னாபின்னமாகும் என்று அவர் சில்லிட வைக்கும் தகவலை வெளியிட்டுள்ளார்.

   

இந்தத் தோல்வி அமெரிக்காவிற்கு மிகப்பெரிய இராணுவப் பேரழிவாக அமையும் அதே வேளையில், போர்க்கால அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி ட்ரம்ப் மூன்றாவது முறையாக ஜனாதிபதி பதவியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் பேராசிரியர் Jiang தனது கணிப்பில் தெரிவித்துள்ளார். 21 ஆம் நூற்றாண்டின் நவீனப் போர்களை எதிர்கொள்ள அமெரிக்க இராணுவம் முழுமையாகத் தயாராக இல்லை என்றும், தரைப்படைகளை ஈரானுக்குள் அனுப்புவது அமெரிக்காவின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். பேராசிரியரின் இந்தக் கணிப்பு உலக அரசியலில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.