அசாம் மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், தங்களது முதல் மனைவியை சட்டரீதியாக விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட முதல் மனைவி இதுகுறித்து அரசிடம் முறையிடும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட ஊழியரின் மாத ஊதியத்தில் இருந்து 20 சதவீத தொகையை அரசு பிடித்து, அதனை நேரடியாக அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவாகரத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் காலகட்டத்தில், முதல் மனைவி எவ்வித பொருளாதார நெருக்கடியும் இன்றி வாழ்வதை உறுதி செய்யவே இந்த புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியாகும் வரை இந்த ஊதியப் பிடித்தம் தொடர்ந்து அமலில் இருக்கும். விவாகரத்து பெறாமலேயே மனைவியை தவிக்கவிட்டுச் செல்லும் அரசுப் பணியாளர்கள் மீது ஏராளமான புகார்கள் வந்ததாலேயே, பலதார மணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அசாம் அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
அரசு ஊழியர்களைத் தொடர்ந்து, தனியார் துறையில் பணிபுரிபவர்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கும் இதே போன்ற சட்ட ரீதியான மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை விரிவுபடுத்துவது குறித்து மாநில அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் அசாமில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், 2021-ஆம் ஆண்டு முதல் ஹிமந்தா பிஸ்வா சர்மா அம்மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
