மும்பையின் அந்தேரி கிழக்கில் உள்ள வாஸ்து சில்ப் கூட்டுறவு வீட்டுவசதி சங்க வளாகத்தில், பால் மற்றும் பேட்டரி வாங்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சுவர்ணா குல்கர்னி (75) என்ற ஓய்வுபெற்ற ஆசிரியை, மூன்று தெருநாய்களால் சூழப்பட்டு இடது கணுக்காலில் கடிக்கப்பட்டார். பாதுகாப்பு ஊழியர் உடனடியாக நாய்களை விரட்டியதால் அவர் தப்பினார். எனினும், ஹோலி ஸ்பிரிட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அது ‘கேட்டகரி 3’ ரகக் கடி எனக் கண்டறியப்பட்டு, காயத்தைச் சுற்றி 12 ஊசிகள் போடப்பட்டுள்ளன. தற்போது அவர் காலில் எடையை ஊன்றி நடக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்.
இவ்வீட்டுவசதி சங்கத்தில் தெருநாய்கள் மனிதர்களைத் தாக்குவது இது முதல் முறையல்ல. கடந்த 2025 மார்ச் 5 அன்று ராமச்சந்திர பிவா ஷிண்டே என்ற 55 வயது பாதுகாப்பு ஊழியரும் நாய்க்கடிக்கு ஆளானார். அது தொடர்பாக மேக்வாடி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டு, மாநில மனித உரிமைகள் ஆணையம் வரை அப்பிரச்சனை சென்றது. அதன் தொடர்ச்சியாக பிருஹன்மும்பை மாநகராட்சியின் ‘கே-ஈஸ்ட்’ வார்டு குழுவினர் அப்பகுதியில் இருந்து நான்கு தெருநாய்களைப் பிடித்தனர். ஆனால், தற்போது மீண்டும் அதேபோன்ற தாக்குதல் நடந்துள்ளதால், அன்று பிடிக்கப்பட்ட நாய்கள் என்னவாயின என்றும், அவையே மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டனவா என்றும் குடியிருப்போர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
https://twitter.com/i/status/2089670117018021943
இச்சம்பவம் குறித்து மாநகராட்சி மற்றும் காவல்துறையிடம் பொதுமக்கள் தொடர்ந்து புகார்களைத் தெரிவித்து வருகின்றனர். ‘கே-ஈஸ்ட்’ வார்டின் புதிய உதவி ஆணையர் வனிதா கோகடே, புதிய சம்பவம் குறித்து தமக்கு நேரடி புகார் எதுவும் வரவில்லை என்றும், விரைவில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேக்வாடி காவல் நிலையத்தின் மூத்த காவல் ஆய்வாளர் கிரண் ஸ்ரீராம் சாலிகிராம், பொதுமக்கள் தங்களை அணுகியதை உறுதிப்படுத்தியதோடு, தெருநாய்கள் தொடர்பான விஷயம் என்பதால் உள்ளூர் மாநகராட்சி அலுவலகத்தை அணுகுமாறு கூறியதாகவும், எழுத்துப்பூர்வ புகார் அளிக்கப்பட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
