2013-ம் ஆண்டு சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, தங்கியிருந்த விடுதியின் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் ஹரிஷ் ராணாவுக்கு மூளையில் பலத்த காயம் ஏற்பட்டது. அன்றிலிருந்து கடந்த 13 ஆண்டுகளாக அவர் எவ்வித அசைவோ, உணர்வோ இன்றி ‘Persistent Vegetative State’ எனப்படும் ஆழ்ந்த கோமா நிலையில் இருந்து வருகிறார். உணவுக் குழாய் மூலம் மட்டுமே உயிர் காக்கும் திரவ உணவுகள் வழங்கப்பட்டு வந்தன. தனது மகனின் இந்த அவல நிலையைச் சகிக்க முடியாத தந்தை அசோக் ராணா, மகனுக்கு நிம்மதியான மரணத்தை வழங்கக் கோரி நீதிமன்றத்தை நாடினார்.
நீதிபதி ஜே.பி. பர்திவாலா மற்றும் நீதிபதி கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் உணர்ச்சிகரமான தீர்ப்பை வழங்கியது. “வாழ்க்கையின் மிகப்பெரிய துயரம் மரணம் அல்ல, கைவிடப்படுவதுதான். ஆனால் நீங்கள் உங்கள் மகனை ஒருபோதும் கைவிடவில்லை; மாறாக அவருக்கு கண்ணியமான மரணத்தை வழங்கவே போராடுகிறீர்கள்” என்று ஹரிஷின் பெற்றோரைப் பாராட்டிய நீதிபதிகள், ஹரிஷ் இனி குணமடைய வாய்ப்பே இல்லை என்ற மருத்துவ அறிக்கையை ஏற்றுக்கொண்டனர். எய்ம்ஸ் (AIIMS) மருத்துவர்கள் அடங்கிய குழு ஹரிஷுக்கு வழங்கப்படும் செயற்கை ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து வழங்கும் முறையை (CANH) படிப்படியாக நிறுத்தி, அவருக்கு நிம்மதியான மரணத்தை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்தத் தீர்ப்பின் மூலம் ‘Passive Euthanasia’ எனப்படும் மறைமுகக் கருணைக்கொலை குறித்த சில முக்கிய விளக்கங்களை நீதிமன்றம் அளித்துள்ளது. குறிப்பாக, உணவுக் குழாய் மூலம் வழங்கப்படும் உணவு மற்றும் நீர்ச்சத்தும் ஒரு வகை மருத்துவச் சிகிச்சையே என்றும், நோயாளி குணமடைய வாய்ப்பே இல்லாத பட்சத்தில் அந்தச் சிகிச்சையை நிறுத்துவது சட்டப்படி செல்லும் என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்கனவே இக்கோரிக்கையை நிராகரித்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தலையீடு மரணத் தறுவாயில் உள்ள நோயாளிகளின் ‘கண்ணியமாக இறக்கும் உரிமை’ (Right to die with dignity) என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஹரிஷ் ராணாவை உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் ‘பேலியேட்டிவ் கேர்’ (Palliative Care) பிரிவுக்கு மாற்றவும், அங்கு தகுந்த மருத்துவக் கண்காணிப்பில் மிகவும் மென்மையான முறையில் சிகிச்சையை விலக்கிக் கொள்ளவும் நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது. இந்தத் தீர்ப்பு இந்தியாவில் மருத்துவ அறம் மற்றும் சட்ட ரீதியான முடிவுகளில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. 13 ஆண்டுகால வலியும், வேதனையும் ஒரு முடிவுக்கு வரப்போவதை எண்ணி ஹரிஷின் குடும்பத்தினர் கலங்கிய கண்களுடன் நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்தனர்.
