அசாம் மாநிலம் ஜோர்ஹட் பகுதியைச் சேர்ந்த 25 வயதான யஷ் தனுகா அகர்வால், தனது குடும்பத்தினர் ஊரில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி வீட்டில் இருந்த லாக்கரை உடைத்து சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் தங்க நகைகளைத் திருடியுள்ளார். இது தொடர்பாக அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சைபர் பிரிவின் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வீட்டில் உள்ளவர்களே இந்தத் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்த நிலையில், யஷ் அகமதாபாத்திற்கு தப்பிச் சென்றது செல்போன் சிக்னல் மூலம் கண்டறியப்பட்டது. உடனே அவரது தந்தை அங்கு நேரில் சென்று மகனை சொந்த ஊருக்கு அழைத்து வந்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தார்.
காவல்துறையினர் யஷிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. தனது நீண்ட கால காதலியான பூபாலி தத்தாவுடன் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காகவே, நண்பர்களான ஜிது சோமானி மற்றும் ரோஹித் பிரசாத் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் பூட்டு திறக்கும் நபரின் உதவியுடன் இந்தத் திருட்டை அவர் அரங்கேற்றியுள்ளார். திருடிய பணத்தில் காதலிக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பில் ஐபோன் வாங்கிக் கொடுத்ததுடன், பல்வேறு சொகுசு விடுதிகளில் தங்கி சுமார் 5 லட்சம் ரூபாய் வரை அவருக்காகச் செலவு செய்துள்ளார். குடும்பத்தினர் வியாபாரத்திற்காக வைத்திருந்த பணத்தை திருடிய இந்த வழக்கில், யஷின் நண்பர்கள் இருவரும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். எனினும், காதலியிடம் விசாரணை மட்டுமே நடத்தப்பட்டுள்ளது; அவர் குற்றவாளியாகச் சேர்க்கப்படவில்லை.
