ஹைதராபாத் ஜவஹர்நகரில் நடந்த விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது, நடனக் குழு ஒன்று பொதுமக்களின் முன்னிலையில் ஆபத்தான இந்திய மலைப்பாம்பு மற்றும் கோழியை வைத்து வன்கொடுமை செய்து ஆட்டம் காட்டி வந்துள்ளது.
இதுகுறித்துத் தகவல் அறிந்த ஹைதராபாத் விலங்குகள் வன்கொடுமைத் தடுப்புச் சங்கத்தினர், கடந்த 5 நாட்களாக விசாகப்பட்டினத்தில் இருந்து அந்த டான்ஸ் குழுவைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர். கடந்த செப்டம்பர் 19 அன்று கொண்டாப்பூர் பகுதியில் பிடிக்க முயன்றபோது தப்பிச் சென்ற பாம்பாட்டியை, செப்டம்பர் 20 அன்று மதுரா நகர் காவல்துறையின் உதவியுடன் கையும் களவுமாகப் பிடித்தனர்.
அவரிடமிருந்து இந்திய மலைப்பாம்பு மற்றும் கோழி ஆகியவை பத்திரமாக மீட்கப்பட்டன. இந்திய மலைப்பாம்பு என்பது 1972-ஆம் ஆண்டின் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கக்கப்பட்ட ஒரு உயிரினமாகும். சட்டவிரோதமாகப் பாம்பைப் பயன்படுத்தி வன்கொடுமையில் ஈடுபட்ட நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
