தமிழக அரசியலில் கடந்த சில வாரங்களாக பல்வேறு அதிருப்தி அலைகளும், அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வரும் நிலையில், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்ட அரசியலில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவின் அசைக்க முடியாத முகமாக விளங்கி வரும் அவர், தற்போதைய கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அதிமுகவிலிருந்து விலகப் போவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து, அதன் மூலம் மீண்டும் ராஜ்யசபா எம்பி பதவியைப் பெற அவர் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பலத்த பேச்சு எழுந்துள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாகத் திகழ்ந்த சி.வி.சண்முகம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிலும் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர் மட்டக் குழுவில் இடம் பெற்றிருந்தார். ஆனால், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி சந்தித்த தோல்விக்குப் பிறகு எழுந்த உட்கட்சிப் பூசல்களும், அவரிடமிருந்து விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதும் அவருக்குள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தன்னிடம் இருந்து பறிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பொறுப்பை மீண்டும் வழங்கினால் மட்டுமே முழுமையாகக் கட்சிப் பணிகளில் ஈடுபடுவேன் என்பதில் அவர் உறுதியாக இருந்த நிலையில், அண்மையில் விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தை அவரது தரப்பு திடீரென ஒப்படைத்தது இந்த பிளவை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் நடத்தப்பட்ட பல கட்ட பேச்சுவார்த்தைகளில் இறுதி உடன்பாடு எதுவும் எட்டப்படாததால், மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மூலம் மீண்டும் ஒரு இறுதி சமரச முயற்சிக்கு அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், மாவட்டச் செயலாளர் பதவியை விட்டுக் கொடுக்கச் சண்முகமும், அதைப் உடனடியாக வழங்க எடப்பாடி பழனிசாமியும் தயாராக இல்லை என்பதால் இப்பேச்சுவார்த்தை தோல்வியடையவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது. இதனால் அதிருப்தியின் உச்சத்திலிருக்கும் சி.வி.சண்முகம், அதிமுகவை விட்டு முற்றிலுமாக வெளியேறி தனக்கான ஒரு புதிய அரசியல் பாதையைத் தேர்வு செய்யத் துணிந்து விட்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பரபரப்பான சூழலில், அதிமுகவிலிருந்து விலகி அண்மையில் தவெகவில் இணைந்து தற்போது அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் தான், சி.வி.சண்முகத்தை தவெக நோக்கி இழுக்கும் பின்னணியில் இருப்பதாகத் தீவிரமான தகவல்கள் உலவுகின்றன. செங்கோட்டையன் மூலமாக தவெக தலைமையுடன் சில முக்கிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், சண்முகம் தவெகவில் இணைந்தால் அவருக்கு டெல்லியில் தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி பதவி அல்லது மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதுவரை எந்தத் தரப்பும் இதற்கு அதிகாரப்பூர்வமாகப் பதிலளிக்கவில்லை என்றாலும், விழுப்புரம் சிங்கத்தின் இந்த ‘ரூட் மாற்றம்’ அதிமுகவிற்குப் பெரும் பின்னடைவாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
