நீதிமன்றக் காவல், கைது நடவடிக்கைகள், மற்றும் அரசியல் கட்சிகளின் பரஸ்பர குற்றச்சாட்டுகள் எனத் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள “குதிரை பேரம்” சர்ச்சை, தற்போது தமிழக வெற்றிக் கழக வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. தவெக-வின் ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம், சபாநாயகருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வர ஆதரவு அளிக்க ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக எழுந்த புகாரே இந்த விவகாரத்தின் மையப்புள்ளியாகும். இந்த நிலையில், இளையராஜா மட்டுமன்றி அக்கட்சியைச் சேர்ந்த மேலும் சில எம்.எல்.ஏ-க்களிடமும் இதேபோன்று பேரம் பேசப்பட்டதாகவும், அவர்களில் சிலர் முன் பணம் வாங்கக் கூடத் தயாராக இருந்ததாகவும் வெளியாகியுள்ள புதிய தகவல் பனையூர் வட்டாரங்களை அதிர வைத்துள்ளது.
இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜா கடந்த ஜூன் 29-ஆம் தேதி சென்னை காவல் ஆணையரிடம் அதிரடி புகார் ஒன்றை அளித்தார். அதில், “இந்தியன் பொலிடிகல் டெமாக்ரடிக் ஸ்ட்ராடஜீஸ் என்ற கருத்துக்கணிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் திருநாவுக்கரசு என்பவர் தன்னைத் தொடர்புகொண்டு, சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஒத்துழைத்தால் ரூ.35 கோடி தருவதாகக் ஆசைவார்த்தை காட்டியதாகவும், அதை நிராகரித்தபோது தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இப்புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய திருவல்லிக்கேணி போலீசார், சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ் மற்றும் சென்னையைச் சேர்ந்த தியாகராஜன் ஆகிய மூவரையும் கைது செய்து, ஜூலை 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில், இந்த சதியின் பின்னணியில் திமுக முன்னாள் அமைச்சரும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் பெயர் அடிபடுவது வழக்கை மேலும் சிக்கலாக்கியுள்ளது. கைது செய்யப்பட்ட நரேஷ், அசோக்குமாரை சென்னையில் நேரில் சந்தித்ததும், செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமாரின் பெயர்களைப் பயன்படுத்தியே திருநாவுக்கரசு, எம்.எல்.ஏ இளையராஜாவைத் தொடர்புகொண்டு பேசியதும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், குற்றவாளிகளுக்கும் அசோக்குமாருக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு குறித்து விரிவான விசாரணை நடத்தி, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
மறுபுறம், இந்த விவகாரத்தைச் சமாளிக்கும் விதமாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆகியோர் இணைந்து சில எம்.எல்.ஏ-க்களை பதவி விலகச் செய்ய முயன்றதாகக் குற்றம்சாட்டி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆளுநர் விஸ்வநாத் அர்லேகருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் நிர்மல்குமார், சட்டமன்றத்தில் தங்களிடம் 120 உறுப்பினர்களின் பலம் உள்ளதாகக் கூறியுள்ளார். ஒருபுறம் ஆளுநரிடம் திமுக அளித்துள்ள புகார், மறுபுறம் ரூ.35 கோடி பேரம் எனத் தமிழக அரசியல் களம் தகிக்கும் நிலையில், விஜய்யிடம் விசுவாசமாக இருந்து புகாரளித்த இளையராஜாவைத் தாண்டி, அட்வான்ஸ் பெற சம்மதித்த அந்த தவெக எம்.எல்.ஏ-க்கள் யார் யார் என்பது குறித்த ரகசிய விசாரணையும் தற்போது தீவிரமடைந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள ஜர்தா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…
சமீபத்தில் மறைந்த பிரபல இயக்குனர் பாக்யராஜின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் ஊடகங்களின் கவரேஜ் குறித்து…
கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்து வரும் தங்கத்தின் விலை, இன்று (ஜூலை 3) மீண்டும் அதிரடியாக உயர்ந்து நகைப்…
தமிழ்நாட்டில் கடந்த ஆட்சிக்காலத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் அடுத்தடுத்து பல வழக்குகளில் கைது செய்யப்பட்டதைப் போன்ற ஒரு பரபரப்புச் சூழல்…
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய சுமார் 20 இடங்களில் கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வழக்கறிஞர் அணியின் இணைச் செயலாளர் ஞானசௌந்தரி, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது லஞ்சப்…