போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கோப்பை கனவு, மொராக்கோ அணிக்கு எதிரான அதிர்ச்சித் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது. 2022 உலகக் கோப்பையின் கால் இறுதிப் போட்டியில் மொராக்கோ 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது. மாற்று வீரராக களம் இறங்கிய ரொனால்டோவால் ஆட்டத்தின் போக்கை மாற்றி தன் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.
போட்டி முடிந்ததும், தனது உலகக் கோப்பை கனவு கலைந்ததை உணர்ந்த 37 வயதான ரொனால்டோ, மைதானத்திலேயே மிகுந்த ஏமாற்றத்துடன் கண்ணீர் விட்டு அழுதார். சக வீரர்கள் மற்றும் மொராக்கோ வீரர்கள் அவரைத் தேற்ற முயன்றனர். எனினும், தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல், மைதானத்திலிருந்து வெளியேறி வீரர்கள் ஓய்வறைக்குச் செல்லும் வழியிலும் அவர் தொடர்ந்து கண்ணீர் மல்க நடந்து சென்ற காட்சிகள் உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்களைப் பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியது.
அநேகமாக இதுவே ரொனால்டோ விளையாடும் கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. ஐந்து வெவ்வேறு உலகக் கோப்பை தொடர்களில் கோல் அடித்த ஒரே வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திருந்த போதிலும், உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற அவரது நீண்ட காலக் கனவு இந்தத் தோல்வியின் மூலம் நிறைவேறாமலேயே போனது.
