சென்னை மாமல்லபுரம் நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் தமிழக முதல்வர் விஜய் இன்று திடீர் கள ஆய்வு மேற்கொண்டார். அங்கு கடல்நீர் உறிஞ்சப்படும் தொழில்நுட்பம் முதல் அது சுத்திகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் வரையிலான ஒட்டுமொத்தக் கட்டமைப்பினையும் நேரில் பார்வையிட்ட அவர், நன்னீராக்கப்பட்ட குடிநீரைக் குடித்துப் பார்த்து ஆய்வு செய்தார். மேலும், இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக விரிவான ஆலோசனையில் ஈடுபட்டார்.
நெம்மேலியில் சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, கடந்த 2006-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியால் முதலாவது அலகு தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 2024-ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலினால் இரண்டாவது அலகு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. தற்போது, அதே 2024-ஆம் ஆண்டில் ரூ.1,500 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட, ஒரு நாளைக்கு 40 கோடி லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் மூன்றாம் அலகு சுத்திகரிப்பு நிலைய அமைக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.
இந்த மூன்றாம் அலகு திட்டம் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில், சுமார் 20 லட்சம் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதன் எஞ்சிய பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தினார். முதல்வர் விஜய் இன்று திடீரென நேரில் சென்று ஆய்வு நடத்தியதும், அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டதுமான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
