டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் குரல் கொடுத்த மாணவர்களைக் காவல்துறையினர் கைது செய்து வருவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு ரத்து, வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய அமைச்சர் ராஜினாமா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்ற அமைதியான போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்தச் சூழலில், தமிழகத்தில் அறவழியில் போராடும் மாணவர்களைக் காவல்துறையினர் அலைக்கழிப்பதும் தொடர்ந்து கைது செய்வதும் ஜனநாயக உரிமைக்கே எதிரானது எனச் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக தவெக அரசுக்கு ஆதரவளித்து வந்த சிபிஎம், தற்போது அதே அரசின் காவல்துறையைக் கடுமையாக விமர்சித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. சென்னையில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நடத்திய போராட்டங்களை மூன்று நாட்களாகக் காவல்துறையினர் ஒடுக்கி வருவதாகக் குற்றம்சாட்டியுள்ள சண்முகம், கோவை, மதுரை, கடலூர், தஞ்சை உள்ளிட்ட பல நகரங்களில் கல்வி வளாகங்களுக்குள் புகுந்து மாணவர்களைக் கைது செய்திருப்பது இதுவரை நடந்திராத, மிகவும் மோசமான அத்துமீறல் என்று சாடியுள்ளார்.
மாணவர்களின் போராட்ட உரிமையை நசுக்கும் தமிழ்நாடு காவல்துறையின் இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. காவல்துறையைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள மாநில முதலமைச்சர், இதில் உடனடியாகத் தலையிட்டு அடக்குமுறைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் மாணவர்கள் ஜனநாயக ரீதியில் அறப்போராட்டம் நடத்த உரிய இடங்களை ஒதுக்கித் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வை எதிர்த்து வரும் தவெக அரசு, அதே நீட் தேர்வுக்கு எதிராகப் போராடும் மாணவர்களின் ஜனநாயகக் குரலை நெரிப்பது, பாஜகவின் கல்விக் கொள்கைக்குத் துணை போவதற்குச் சமம் என்று சிபிஎம் எச்சரித்துள்ளது. கல்வி வளாகங்களுக்குள் காவல்துறை நுழைந்து கைது நடவடிக்கைகளில் ஈடுபட எந்த முகாந்திரமும் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அக்கட்சி, மாணவர்களின் அறவழிப் போராட்டங்களுக்குத் தடை விதிக்காமல் அவர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கத் தமிழக அரசு உடனடியாக முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
