தெலுங்கானா மாநிலம் பூபால பள்ளி சிங்கரேணி குரகுலாவை சேர்ந்த ஓடேலு லலிதா தம்பதியினர் அங்குள்ள அரசு மருத்துவமனை அருகே வசித்து வருகின்றனர்.மேலும் அதன் அருகில் கொட்டகை ஒன்றை அமைத்து அதில் ஏராளமான எருமை மாடுகளை வளர்த்து வந்துள்ளனர். ஒரு சில நாட்களுக்கு முன்பு சாலை விரிவாக்கம் செய்ய உள்ள நிலையில் கொட்டகையை இடிக்க வேண்டும் என அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இருப்பினும் அதற்கு எந்த பதிலும் ஓடேலு அளிக்கவில்லை. அதை தொடர்ந்து நேற்று போலீஸ் அதிகாரிகளின் துணையோடு அவர்களது வீட்டிற்கு வந்து கொட்டகையை இடித்தனர்.
அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் தனது உறவினர் ரமேஷ் என்பவருடன் அவர்களுடைய எருமை மாடுகளை அங்குள்ள எம்.எல்.ஏ அலுவலக வளாகத்திற்கு கொண்டு வந்து கட்டி வைத்துள்ளனர். மேலும் எம்.எல்.ஏ.வின் தூண்டுதலில் பேரில் சட்ட விரோதமாக கொட்டகையை இடித்து விட்டதாக போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் போராட்டத்தை கைவிட மறுத்ததால் அவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது திடீரென ஓடேலு தன்னிடம் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். பின்னர் போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்கு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட லலிதா மற்றும் ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
