திடீரென வந்த ஃபோன் கால்… 2 நாட்கள் பாத்ரூம் கூட போகாமல் வீட்டுக்குள்ளேயே இருந்த வயதான தம்பதி… கதவைத் தட்டிய போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!

By Nanthini on கார்த்திகை 11, 2025

Spread the love

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் தன்னுடைய மனைவியுடன் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று முதியவரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்த நிலையில் மறுமுனையில் பேசிய நபர், மும்பையில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து பேசுவதாகவும் உங்கள் ஆதார் எண்ணை வைத்து வங்கி கணக்கை சோதனை செய்ததில் பயங்கரவாதிகளுக்கு பலமுறை பணம் அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் உங்களுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் வந்துள்ளது. நாங்கள் உங்கள் வங்கிக் கணக்கை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறி செல்போன் அழைப்பை துண்டித்துள்ளனர்.

பிறகு சிறிது நேரத்தில் போலீஸ் அதிகாரி போல சீருடை அணிந்து வீடியோ காலில் பேசிய நபர், பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதால் உங்களையும் உங்களுடைய மனைவியையும் டிஜிட்டல் கைது செய்து உள்ளோம், வீட்டை விட்டு நீங்கள் வெளியே செல்லக்கூடாது என்று கூறியுள்ளனர். மேலும் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிகளுடன் போலீசார் கண்காணித்துக் கொண்டே இருப்பதாகவும் வீட்டை விட்டு வெளியே வந்தால் சுட்டு விடுவார்கள், உங்கள் வங்கி கணக்கில் உள்ள 18 லட்சத்தை நாங்கள் சொல்லும் வங்கி கணக்கு வேண்டும், உங்கள் வங்கி கணக்கை முழுமையாக சோதனை செய்த பிறகு அந்த பணத்தை மீண்டும் உங்கள் வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்து விடுவோம்,பணத்தை அனுப்பும் வரை வீடியோ கால் இணைப்பை துண்டிக்க கூடாது என்று மிரட்டியுள்ளனர்.

   

இதனால் பயந்துபோன முதியவர் தன் மனைவியுடன் வீட்டிற்குள்ளேயே இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து வீடியோ காலில் போலீஸ் அதிகாரிகள் என்று கூறி அடிக்கடி சிலர் பேசி உள்ளனர். அவர்கள் உடனடியாக நாங்கள் கூறிய வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்ப வேண்டும் என மிரட்டிக்கொண்டே இருந்தனர். குறிப்பாக வீட்டுக்குள் உள்ள கழிவறைக்கு கூட போக விடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பயத்தில் இருந்த தம்பதி இரவு முழுவதும் தூங்காமலும் வெளியே செல்லாமலும் வீட்டிற்குள்ளேயே தவித்தனர். ஆனால் அவர்கள் மோசடி நபர்கள் கூறிய வங்கிக் கணக்குக்கு பணத்தை மட்டும் அனுப்பவில்லை.

   

இந்நிலையில் இரண்டு நாட்கள் வயதான தம்பதி வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முதியவர் வீட்டின் கதவை தட்டியதும் கதவை திறந்த முதியவர் தங்களை மும்பை போலீசார் டிஜிட்டல் கைது செய்திருப்பதாகவும் வெளியே வந்தால் சுட்டு விடுவதாகவும் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அப்படி யாரும் டிஜிட்டல் கைது செய்ய முடியாது, வெளியே துப்பாக்கியுடன் போலீசார் யாருமில்லை என்று கூறி அவர்களை சமாதானப்படுத்தி மீட்டனர்.

 

பிறகு முதியவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற விசாரணை செய்ததில் உண்மை வெளிவந்தது. ஏமாற்றி பண மோசடி செய்வதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டதாக போலீசார் முதியவரிடம் தெரிவித்த பிறகு தான் அவர் நிம்மதி அடைந்தார். மோசடி கும்பல் கூறிய வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்பாததால் முதியவரிடமிருந்த 18 லட்சம் ரூபாய் பணம் தப்பியது. இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.