தமிழகத்தில் தற்போதைய தவெக ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாக எழுந்த புகாரில், முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு சென்னை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சம்மனுக்கு பதிலளிக்க திங்கள் கிழமை வரை கால அவகாசம் உள்ள நிலையில், அவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் அதிரடியாக ‘லுக் அவுட்’ நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீஸ் இந்த விவகாரத்தில் காட்டி வரும் அதீத வேகத்தைப் பார்க்கும்போது, செந்தில் பாலாஜி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் விஜய்யும் இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க மும்முரமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தின் பின்னணியில் ரூ.25 கோடி பேரம் பேசப்பட்ட ஆடியோ பதிவு இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த கருத்துக்கணிப்பு நிறுவன உரிமையாளர் திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ் மற்றும் சென்னையைச் சேர்ந்த தியாகராஜன் ஆகியோர் இணைந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம், சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக வாக்களிக்க ரூ.25 கோடி தருவதாகப் பேரம் பேசியுள்ளனர். இது தொடர்பாக எம்.எல்.ஏ இளையராஜா அளித்த அதிகாரப்பூர்வ புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீசார், முதற்கட்டமாக திருநாவுக்கரசு, தியாகராஜன், கார்த்திக், செல்வன் மற்றும் ராஜேஷ் ஆகிய 5 பேரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் தனித்தனியாகப் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆட்சியை கவிழ்ப்பதற்காக மொத்தம் ரூ.40 கோடி அளவில் சதித் திட்டம் தீட்டப்பட்டது அம்பலமாகியுள்ளது. மேலும், இந்த ஒட்டுமொத்த சதித் திட்டத்திற்கும் பின்னணியில் ‘மாஸ்டர்மைண்டாக’ செயல்பட்டது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் அவரது சகோதரர் அசோக் குமாரும் தான் என்று கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். கரூரில் அதிமுகவிலிருந்து விலகிய எம்.ஆர். விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்துள்ளதாலும், அங்கு இடைத்தேர்தல் வரவுள்ளதாலும், முதல்வர் விஜய் தனது கரூர் பயணத்திற்கு முன்பாகவே செந்தில் பாலாஜியை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதற்கிடையே, போலீசார் விசாரணை நடத்த முற்பட்டபோது செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமாரின் செல்போன்கள் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால், இருவரும் தலைமறைவாகிவிட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து, கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டி கிராமத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் பூர்வீக வீட்டிற்குச் சென்ற திருவல்லிக்கேணி போலீசார், அவரது பெற்றோர் வேலுச்சாமி மற்றும் பழனியம்மாளிடம் சம்மனை வழங்கியுள்ளனர். அதில், மறுநாளே சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜியும் அசோக் குமாரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
