டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டின் விஐபி இரவு விருந்து நடைபெற்றது. புடின் உட்பட பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்துகொண்ட இந்த விருந்தில், பன்னீர் லபாப்தார், காளான் கெபாப், பருப்பு வகைகள், ஜிலேபி, ஃபிர்னி உள்ளிட்ட முழுக்க முழுக்கத் தூய சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்பட்டன.
இந்த சைவ உணவுப் பட்டியலைப் பார்த்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் காரசாரமான கருத்தைப் பதிவிட்டுள்ளார். “தகவலுக்காகச் சொல்கிறேன்… இந்தியாவில் 80% மக்கள் அசைவம் சாப்பிடுபவர்கள். இந்திய அசைவ உணவுகள் மிகவும் சுவையானவை; அதேபோல என் தங்கை பிரியங்கா சமைக்கும் சோலே பட்டூரே உணவும் சுவையானது” என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.
வெளிநாட்டுத் தலைவர்கள் கலந்துகொள்ளும் சர்வதேச விழாவில் இந்தியாவின் பலதரப்பட்ட உணவுப் பழக்க வழக்கங்களைப் பிரதிபலிக்காமல், பாஜக அரசு தனது சொந்த உணவு விருப்பங்களை மற்றவர்கள் மீது திணிப்பதாகக் காங்கிரஸின் பவன் கேராவும் குற்றம் சாட்டியுள்ளார். பிரிக்ஸ் மாநாட்டின் முக்கிய உரையாடல்களுக்கு மத்தியில், இந்த உணவு அரசியல் விவாதம் சோஷியல் மீடியாவில் பெரும் காரசாரமான விவாதப் பொருளாக மாறியுள்ளது.
