“ராமருக்கே அல்வா கொடுத்த பாஜக”… அவருக்கு வக்காலத்து வாங்காதீங்க… தமிழக ஆளுநரை ஓப்பனாக வறுத்தெடுத்த காங்கிரஸ் தலைவர்…!

By Visaka on ஆடி 5, 2026

Spread the love

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழுக் கூட்டம் நாளை (ஜூலை 6) நடைபெற உள்ள நிலையில், அதில் கட்சியின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற கட்சியின் முன்னணி அமைப்புகள் மற்றும் துறை தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் 7 கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடு நடந்துள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். பாஜகவினர் திட்டமிட்டு இந்த ஒழுங்குபடுத்தப்பட்ட ஊழலைச் செய்துள்ளதாகவும், இது குறித்து பிரதமர் மோடி இதுவரை வாய் திறக்கவில்லை என்றும் சாடிய அவர், ராமர் கோயில் விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து தமிழக ஆளுநரின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த மாணிக்கம் தாகூர், ஆளுநர் பாஜகவின் ஏஜெண்டாகச் செயல்படுவதாகவும், ஆளுநர் அலுவலகத்தின் பெயரை ‘கமலாலயம்’ என்று மாற்றிவிடலாம் என்றும் கேலி செய்தார். டெல்லி சென்று அமித்ஷாவைச் சந்தித்த வந்த பிறகு ஆளுநரின் போக்கு முற்றிலும் மாறியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஆளுநர் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை விட ஒரு படி மேலே சென்று அரசியல் செய்வதாகக் குற்றஞ்சாட்டினார். மேலும், ஆளுநருக்கு வக்காலத்து வாங்க வேண்டாம் என்றும், தற்போதைய ஆளுநரின் செயல்பாடுகளை அவரே ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்றும் தமிழிசை சௌந்தரராஜனுக்கு அவர் அறிவுறுத்தினார்.

   

மத்திய அரசின் திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மாற்றி, அதில் ஏற்கனவே இருந்த மத்திய அரசின் 90 சதவீத நிதிப் பங்கீட்டை 60 சதவீதமாகக் குறைத்து, மாநில அரசின் பங்கை 40 சதவீதமாக உயர்த்தியுள்ளனர் என்று சுட்டிக்காட்டினார். ராகுல் காந்தி பிரதமரானால் இந்தத் திட்டத்தின் பெயர் மீண்டும் பழையபடி மாற்றப்பட்டு, 90 சதவீத நிதியை மத்திய அரசே வழங்கும் என்று உறுதியளித்தார். அத்துடன், மத்திய அரசின் ‘பிஎம் ஸ்ரீ’ (PM SHRI) திட்டத்தைக் காங்கிரஸ் கட்சி நிச்சயமாக எதிர்க்கும் என்றும், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் தவறுகளை நெஞ்சுக்கு நேராக எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.