ரயில் பயணங்கள் எப்போதுமே பலதரப்பட்ட மனிதர்களையும், அவர்களின் உணர்வுகளையும் நமக்கு அறிமுகப்படுத்துபவை. சில நேரங்களில் எதிர்பாராமல் நடக்கும் ஆபத்தான தருணங்களில், பெயர் தெரியாத யாரோ ஒரு சக பயணி ‘ஆபத்பந்தவனாக’ மாறி உதவி செய்யும் நெகிழ்ச்சியான சம்பவங்கள் அரங்கேறுவதுண்டு. அப்படித்தான், உத்திரப் பிரதேச மாநிலத்தின் ஓயல் ரயில் நிலையத்தில் நடந்த ஒரு பதைபதைக்க வைக்கும் சம்பவமும், அதில் ஒரு இளைஞர் காட்டிய அசாத்திய துணிச்சலும் தற்போது ஒட்டுமொத்த இணையதளத்தையும் உருக வைத்திருக்கிறது.
பெண் ஒருவர் தனது இரண்டு மகள்களுடன் அதிக லக்கேஜ்களை வைத்துக்கொண்டு அந்த ரயில் நிலையத்தில் இறங்கத் தயாராக இருந்துள்ளார். ரயில் நின்ற சில வினாடிகளுக்குள் அவசர அவசரமாகத் தனது மூத்த மகளையும், மூட்டைகளையும் அவர் பிளாட்பாரத்தில் இறக்கியுள்ளார். ஆனால், அந்தப் பரபரப்பில் தனது 4 வயது மதிக்கத்தக்க இளைய மகள் ரயிலுக்குள்ளேயே இருப்பதை அவர் கவனிக்கத் தவறிவிட்டார். அதற்குள் ரயில் மெல்ல நகரத் தொடங்க, குழந்தையைத் தவறவிட்டதை உணர்ந்த அந்தத் தாய் செய்வதறியாது பதறிப்போய் பிளாட்பாரத்தில் அலறியுள்ளார்.
https://www.instagram.com/reel/DaaDH-zgS19/?utm_source=ig_web_button_share_sheet
அந்தப் பதற்றமான நொடியில், ரயிலில் இருந்த ஒரு இளைஞர் ஒரு வினாடி கூட யோசிக்காமல் செயல்பட்டார். ஓடத் தொடங்கிய ரயிலில் இருந்து அந்தச் சிறுமியைப் பத்திரமாகத் தூக்கிக் கொண்டு கீழே குதித்த அவர், குழந்தையைத் தாயிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தார். அடுத்த கணமே, வேகம் எடுக்கத் தொடங்கிய அதே ரயிலை நோக்கி ஓடிச் சென்று, லாவகமாக மீண்டும் அதில் ஏறிக்கொண்டார். தனக்குக் கிடைக்கப் போகும் பாராட்டுகளுக்காகக் கூடக் காத்திருக்காமல், ஒரு உயிரைக் காப்பாற்றிய ஆத்ம திருப்தியோடு அவர் சென்ற விதம் பார்ப்போரைக் கண் கலங்கச் செய்தது.
இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வரும் இந்த வீடியோவை விவரித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர். “இப்படிப்பட்ட மனிதர்கள் இன்னும் இருப்பதால்தான் இந்த உலகத்தில் மனிதம் உயிர்ப்போடு இருக்கிறது” என்று பலரும் நெகிழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். அதே வேளையில், குழந்தைகளுடன் பயணிக்கும்போது பெற்றோர்கள் கூடுதல் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது என்ற எச்சரிக்கையையும் நெட்டிசன்கள் முன்வைக்கத் தவறவில்லை. சுயநலமற்ற அந்த இளைஞரின் அசாத்திய துணிச்சலும், அந்தப் பெருந்தன்மையான மனமுமே இன்று சமூக வலைத்தளங்களில் உண்மையான கடவுளாகப் போற்றப்பட்டு வருகிறது.
