சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் வீரமணி மீதான புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. ஏற்கெனவே இரு சிறுமிகள் அளித்த புகாரின் பேரிலும், அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் தீவிர விசாரணை மேற்கொண்டு காவல்துறை அவரை கைது செய்தது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் அவர்தம் பெற்றோர்கள் தைரியமாக முன்வந்து புகார் அளித்தால் அவர்களின் அடையாளங்கள் மற்றும் தகவல்கள் முற்றிலும் ரகசியமாக வைக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
காவல்துறையின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மேலும் 3 சிறுமிகள் ஜெம் வீரமணி மீது அடுத்தடுத்து பாலியல் புகார் அளித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளதோடு, அவரது பின்னணியில் உள்ள குற்றச் செயல்கள் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளன. அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கும் இந்த புகார்களின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கை மேலும் தீவிரப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
