சீனாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர், அலுவலகத்திற்குத் தாமதமாக வந்ததற்காக அவரது சம்பளத்தில் சுமார் 11,000 ரூபாய் (915 யுவான்) அபராதமாகப் பிடிக்கப்பட்ட சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் ஒரு மாதத்தில் மொத்தம் 27 முறை அலுவலகத்திற்குத் தாமதமாக வந்துள்ளார். ஒவ்வொரு முறையும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், நிறுவனம் விதித்துள்ள இந்த அதிரடி அபராதம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்த விவரங்களை அந்தப் பெண் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், நிறுவனத்தின் கடுமையான விதிமுறைகளின்படி, ஒரு ஊழியர் ஒரு மாதத்தில் மூன்று முறைக்கு மேல் தாமதமாக வந்தால், அடுத்தடுத்த ஒவ்வொரு தாமதத்திற்கும் அபராதம் விதிக்கப்படும் என்பது தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட அந்த ஊழியர் ஒரு மாதத்தில் 27 நாட்கள் தாமதமாக வந்ததால், திரண்ட மொத்த அபராதத் தொகை அவரது மாதச் சம்பளத்தில் பெரும் பகுதியை காலி செய்துவிட்டது.
சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் இருவேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சிலர், “நேரம் தவறாமை என்பது மிக முக்கியம், அலுவலக விதிகளை மதிக்க வேண்டும்” என்று நிறுவனத்திற்கு ஆதரவாகக் கூறுகின்றனர். ஆனால் பலரோ, “ஒரு சில நிமிடங்கள் தாமதத்திற்கு இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக விதிப்பது உழைப்புச் சுரண்டல்” என நிறுவனத்தின் மீதான தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
