வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் 11-வது முறையாகப் போட்டியிடும் திமுக வேட்பாளர் துரைமுருகனின் அறிமுகக் கூட்டம், அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பேசிய துரைமுருகன், தன்னை காட்பாடி மக்களின் ஒருவனாக முன்னிறுத்தினார். மற்ற அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை அளித்துவிட்டுச் செல்வதாகவும், ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லியவற்றைச் செய்துவிட்டு மக்களிடம் வாக்கு கேட்க வந்திருப்பதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
தொகுதிக்குத் தான் செய்த முக்கியப் பணிகளைப் பட்டியலிட்ட அவர், நீண்ட காலமாகக் குடிநீர்ப் பற்றாக்குறை நிலவிய காட்பாடிக்கு காவிரி கூட்டுக் குடிநீரைக் கொண்டு வந்ததையும், ஆங்கிலேயர் காலம் முதல் பொன்னை ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாமல் இருந்த குறையைப் போக்கியதையும் நினைவுகூர்ந்தார். காட்பாடியைத் தனது தொகுதியாக மட்டும் பார்க்காமல் ஒரு ‘திருக்கோயிலாக’ கருதுவதாகவும், அங்குள்ள மக்களைத் தெய்வங்களாக எண்ணிப் பணியாற்றி வருவதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தனது அரசியல் பயணத்தில் கடைபிடித்து வரும் எளிமை மற்றும் ஒழுக்கம் குறித்துப் பேசிய துரைமுருகன், தொகுதிக்குள் வரும்போது எப்போதும் ஆடம்பரங்களைத் தவிர்த்து மக்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். கடந்த 40 ஆண்டுகளில் யாரிடமும் ஒரு பைசா கூட லஞ்சமாகப் பெறவில்லை என்றும், மது மற்றும் தீய பழக்கங்களுக்குத் தூர நின்றே நீதி, நேர்மையுடன் அரசியல் செய்து வருவதாகவும் அவர் உறுதிபடக் கூறினார். மேலும், எதிர்க்கட்சியினரை ஒருபோதும் பழிவாங்கும் நோக்கில் நடத்தியதில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
இறுதியாக, காட்பாடியில் அதிகமுறை வெற்றி பெற்றவன் என்ற அகில இந்தியச் சாதனையுடன் வலம் வரும் தனக்கு எதிராக, வெளியூரில் இருந்து ஒருவரை வேட்பாளராகக் கொண்டு வந்து நிறுத்துவது எந்த வகையில் நியாயம் என்று அவர் கேள்வி எழுப்பினார். தனக்கு இன்னும் சில முடிக்கப்படாத பணிகள் இருப்பதாகவும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அந்தத் திட்டங்கள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றிவிட்டு, என்னை விட்டு விடுங்கள் என நானே விடை பெற்று விடுவேனே தவிர மீண்டும் நிற்க மாட்டேன்” என்று தனது உரையில் துரைமுருகன் உருக்கமாகத் தெரிவித்தார்.
